

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்களில் 10 சதவீதம் பேர் ஓராண்டுக்குள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என்று ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இரைப்பை துறை மருத்துவர் பாசுமணி கூறியுள்ளார்.
ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை சார்பாக உலக கல்லீரல் தினத்தையொட்டி கல்லீ ரல் சம்பந்தமான பிரச்சனைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பி.பாசுமணி பேசியதாவது:
நாட்டில் 20 சதவீதம் பேருக்கு கல்லீரல் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளது. மதுப் பழக்கம் மற்றும் துரித உணவுகளை அடிக்கடி உண்பவர்களுக்கு கல்லீரல் பிரச்சினைகள் வரும் அபாயம் உள்ளது. அதேபோல் பிபிஒ மற்றும் ஐடி சார்ந்த துறைகளில் வேலை செய்பவர்களில் 20 சதவீதம் பேருக்கு கல்லீரல் பாதிப்பு உள்ளது.
உடலில் கொழுப்பு அதிகமாக சேர்வதால்கூட கல்லீரல் பாதிப்பு ஏற்படும். இதனால் எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கல்லீரல் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்களில் 10 சதவீதம் பேர் ஓராண்டுக்குள் உயிரிழக்கின்றனர். நோயாளிக்கு பொருத்தப்பட்ட கல்லீரலை அவரது உடல் மற்றும் மனம் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான் இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.