

நேபாள நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திபெத், வங்கதேசம் மற்றும் இந்தியாவின் உத்தரப் பிரதேசம், பிஹார், மேற்குவங்கம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேபாளத்தில் நில நடுக்கம் தாக்கிய பகுதிகளில் இந்தியர்கள் பலர் சிக்கித் தவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நேபாள மக்களுக்கும் இந்தியாவில் பல மாநிலங்களில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக் கொள்கிறேன். நேபாளத்தில் நேர்ந்ததுபோன்ற நிலநடுக்கம் இந்தியாவின் பல நகரங் களிலும் ஏற்பட வாய்ப்புள்ளதென அறிவியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இமயமலை பகுதியில் மேலும் பல நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு நிலநடுக்க ஆபத்துள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.