

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.8 கோடி மதிப்புள்ள 7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விமான நிலைய அலுவலரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகி றது.
சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் இரவு டைகர் ஏர்வேஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்திறங்கிய பயணிகளை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அந்த விமானத்தில் வந்த ஒரு பயணி தனது டிராவல் பேக்கை விமான நிலையத்தின் ஏரோ பிரிட்ஜின் உள் பகுதியில் வைத்துவிட்டு வந்ததை கவனித்த சுங்கத் துறை அதிகாரிகள் அவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், அவர் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த நவாஸ் கான்(35) என்பது தெரிய வந்தது. அவர் மறைத்து வைத்த டிராவல் பேக்கை எடுத்து சோதனை செய்தபோது, அதில் ரூ.1.8 கோடி மதிப்புடைய 7 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் நவாஸ் கானிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், “வெளிநாடுகளிலிருந்து தான் கொண்டு வரும் கடத்தல் தங்கத்தை விமான நிலைய சுகாதாரப் பிரிவில் பணிபுரியும் ஒருவர் பத்திரமாக வெளியில் கொண்டுவந்து தந்துவிடுவார். கடந்த சில தினங்களுக்கு முன்புகூட இதேபோல 7 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலையம் வழியாக எடுத்துச் சென்றேன்” என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விமான நிலையத்தின் சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் அலுவலர் ஒருவரைப் பிடித்து சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.