Published : 04 May 2014 09:44 AM
Last Updated : 04 May 2014 09:44 AM

எக்ஸ்பிரஸ் ரயிலில் நகை பறிப்பு சேலம் அருகே மீண்டும் துணிகரம்: அதிகாலையில் தப்பிய கும்பலைப் பிடிக்க தீவிரம்

சேலம் அருகே நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்களை கத்தி முனையில் மிரட்டி 10 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

சென்னையில் இருந்து மேட்டுப் பாளையத்துக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. சனிக்கிழமை அதிகாலை 2.55 மணி யளவில் சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த மாவேலிபாளையம் என்ற இடத்தில் அந்த ரயில் சென்றபோது திடீரென நின்றது. அப்போது எஸ் 4, எஸ் 6, எஸ் 7 பெட்டிகளில் இருந்து 5 பேர் கொண்ட கும்பல் இறங்கி ஓடியுள்ளது.

கத்திமுனையில் கைவரிசை

தகவல் அறிந்த டிக்கெட் பரிசோதகர் மற்றும் கார்டு ஆகியோர் சம்பந்தப்பட்ட பெட்டிகளுக்கு சென்று விசாரணை நடத்தியபோது, தப்பி ஓடிய கும்பல் ரயிலில் இருந்த சென்னையைச் சேர்ந்த சித்ரா, ஜெயந்தி, பத்மாவதி ஆகிய மூன்று பெண்களையும் கத்திமுனையில் மிரட்டி 10 பவுன் நகையை பறித்துச்சென்றது தெரியவந்தது.

மேலும், கொள்ளையடிக்க வசதியாக ரயிலின் குளிர்சாதன பெட்டிக்கும், பொதுப் பெட்டிக்குமான இணைப்பை மர்ம கும்பல் துண்டித்து ஏர் லாக் செய்துள் ளனர். இதை அறிந்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியபோதுதான் அந்த கும்பல் ரயிலில் இருந்து தப்பி ஓடியது தெரியவந்தது.

போலீஸ் தீவிர தேடுதல்

நகை பறிப்பு குறித்து சேலம், ஈரோடு ரயில்வே போலீஸாரும், கோவை மேற்கு மண்டல ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம், சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமை யிலான காவல் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே ஏர் லாக் சரிசெய்யப்பட்டு 35 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. தப்பி ஓடிய கொள்ளையர்களைப் பிடிக்க சேலம், நாமக்கல் மாவட்ட போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நகையைப் பறிகொடுத்த பெண்கள் கோவை ரயில்வே போலீஸாரிடம் புகார் கொடுத்தனர்.

தொடரும் ரயில் கொள்ளை

ரயிலில் கொள்ளையடித்த கும்பலைப் பிடிக்க ரயில் பயணிகள் பெரிதும் முயற்சித் தனர். ஆனால், இருட்டாகவும் காட்டுப் பகுதியாகவும் இருந்ததால் அந்தக் கும்பலை அவர்களால் பிடிக்க முடியவில்லை.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சேலம் மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பெண்களிடம் மர்ம கும்பல் 17 பவுன் நகையை பறித்துக்கொண்டு ரயிலை நிறுத்தி தப்பியது. தற்போது மீண்டும் அதைப் போலவே ரயில் பயணிகளிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்ததால் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x