

மீனாகுமாரி கமிட்டியின் பல்வேறு பரிந்துரைகள் பரம்பரை மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து விடும். எனவே, மீனாகுமாரி கமிட்டியின் அறிக்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று ஸ்டாலின் எழுதியுள்ள முகநூல் பதிவில்,'' மீனவர் சமுதாயம் மீண்டும் மீண்டும் மத்திய அரசால் கைவிடப்படுவது ஏமாற்றம் தருகிறது. மீன் வளம் மற்றும் அது சம்பந்தமான கொள்கை குறிப்பு விசாரிப்பதற்கு மீனாகுமாரி தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்திய கடற்பகுதியில் குறிப்பாக நம் மீனவர்கள் மீன் பிடிக்கும் முக்கிய பகுதிகளில் வெளிநாட்டு கப்பல்கள் மீன் பிடிக்க அனுமதிக்கலாம் என்று இந்த கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. அது தவிர ஆழ்கடல் மீன் பிடிப்பு கொள்கையும் வரன்முறை செய்திருக்கிறது. இந்த கமிட்டியின் பல்வேறு பரிந்துரைகள் பரம்பரை மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து விடும். நம் மீனவர்களுக்கு போதிய நவீன மீன்பிடிக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
இலங்கை கடற்படையாலும் மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் வெளிநாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசு உதவ நினைக்கிறது.ஆகவே மீனாகுமாரி கமிட்டியின் அறிக்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் என்று நம்புகிறேன்.
தேசிய மற்றும் மாநில பசுமை தீர்ப்பாயங்களின் தடையையும் மக்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி இந்தியன் ரேர் எர்த் லிமிடெட் நிறுவனம் கன்னியாகுமரி மாவட்டம் மனவாலங்குறிச்சி பகுதியில் மணல் குவாரிகளை நடத்தி மணல்களை சட்ட விரோதமாக அள்ளி வருகிறது.
அப்பகுதி மீனவர்கள் ஆர்.டி.ஒ விடம் புகார் செய்தும் மணல் அள்ளுவது நிற்கவில்லை. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அனைத்தும் சீர்குலைந்து விட்டது. அப்போதும் கூட மக்களின் கோரிக்கைகள் பற்றி அரசு கவலைப்படவில்லை. ஆகவே மணல் குவாரிகளை முறைப்படுத்தி மீனவர்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் காக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.