

பிரபல ஓவியர் கோபுலு மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட இரங்கல் செய்தியில், "ஓவியத்தின் மூலம் புதுமையைப் புகுத்திய, அழியாப் புகழ் பெற்ற அருமை நண்பர் கோபுலு மறைந்த செய்தியை நாளேடுகளில் கண்டு பெரிதும் துயருற்றேன். நான் எழுதிய 'குறளோவியம்', 'சங்கத் தமிழ்', 'பொன்னர் சங்கர்' போன்ற புதினங்களுக்கு கோபுலு தான் ஓவியம் தீட்டினார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றதோடு, முரசொலி அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்படும் கலைஞர் விருதையும் பெற்றவர் கோபுலு. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அவர், ஆனந்த விகடன் இதழில் பல ஆண்டுக் காலம் பணியாற்றினார்.
கொத்தமங்கலம் சுப்பு எழுதிய 'தில்லானா மோகனாம்பாள்', நண்பர் சாவி எழுதிய 'வாஷிங்டனில் திருமணம்', அமரர் தேவனின் 'துப்பறியும் சாம்பு', அண்மையில் மறைந்த நண்பர் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' போன்ற தொடர் கதைகளுக்கு வாரந்தோறும் கோபுலு தீட்டிய ஓவியங்கள் எல்லாம் காலத்தால் அழியாதவை.
கோபுலு மறைந்தாலும் அவர் வரைந்த ஓவியங்கள் எல்லாம் இன்னும் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும். அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.