

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 29-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்வோர் நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை. அவரை முன்மொழிபவரே மனுவை சமர்ப்பித்தால் போதுமானது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 29-ம் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனுக்களை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.
வேட்புமனு தாக்கல் செய்வோர், நேரில் வரவேண்டும் என்ற அவசி யம் இல்லை. நேரில் வர இயலா விட்டால், அவரை முன்மொழிபவர் மட்டும் வந்து மனுவை தாக்கல் செய்யலாம். அதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. மனுத் தாக்கல் செய்ய வரும் வேட்பாளர், தன்னுடன் அதிகபட்சம் 5 பேரை அழைத்து வரலாம். வாக்குச்சாவடி அமைந்துள்ள 100 மீட்டர் எல்லைக்குள் 3 வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது.
ஆன்லைனில் பிரமாண பத்திரம்
இந்தத் தேர்தலில், வேட்பாளர் கள் தங்களது பிரமாண (உறுதி மொழி) பத்திரத்தை மட்டும் ஆன் லைன் மூலம் தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நோட்டரி பப்ளிக் அல்லது பிரமாண ஆணையர் அல்லது முதல் வகுப்பு நடுவர் முன்னிலையில் இணையதளம் மூலம் உறுதி மொழிப் பத்திரம் தாக்கல் செய்ய விரும்பினால் தேர்தல் ஆணை யத்தின் வலைத்தள முகவரி www.eci.nic.in ல் ‘online submission of candidates’-ஐ கிளிக் செய்ய வேண்டும். இது தொடர்பான விளக்கங்களுக்கு supportaffidavit@eci.gov.in என்ற மின்னஞ்சல் முக வரியையும், தொழில்நுட்ப தொடர் பான விளக்கங்களுக்கு 011-23052043 என்ற தொலைபேசி எண் ணையும் தொடர்பு கொள்ளலாம்.
வீடியோ கான்பரன்சிங்
மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் நடத்துவதற் காக, எனது அறையிலேயே கேமரா உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு வீடியோ கான்பரங்சிங்கில் பேச வேறு தளத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது.
மேலும் அரசு கேபிள் டிவி இணைப்பு பெற்றவர்கள் வீடுகளில் ‘1’ என்ற சானலில், தேர்தல் துறை விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.