

கரூர் அருகே கல்லூரி வேன் மீது மினி லாரி மோதியதில் 3 மாணவிகள் மற்றும் பெண் விரிவுரையாளர் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் காயமடைந்தனர்.
கரூர் அருகேயுள்ள புலியூரில் தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. பேட்டைவாய்த்தலையில் இருந்து மாணவ-மாணவிகள் மற்றும் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி வேன் நேற்று காலை புலியூருக்கு வந்துகொண்டிருந்தது.
மகாதானபுரம் அருகேயுள்ள பொய்கைப்புத்தூர் பகுதிக்கு வந்தபோது, கல்லூரி வேன் மீது எதிரே வந்த மினி லாரி மோதியது. இதில் படுகாயமடைந்த, கல்லூரி இரண்டாமாண்டு மாணவி பேட்டைவாய்த்தலை ரிபானாபானு(20), முதலாமாண்டு மாணவி பார்வதிபுரம் ரோஷினிபிரியா(19), உதவி விரிவுரையாளர் முசிறிபொன்சங்கீதா(35) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்துகரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி முதலாமாண்டு மாணவி பேட்டைவாய்த்தலை அண்ணா நகர் கோகிலா உயிரிழந்தார். விபத்து குறித்து லாலாப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவ, மாணவிகளை ஆட்சியர் ஜெயந்தி, டிஐஜி செந்தாமரைக் கண்ணன் உள்ளிட்டோர் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தனர்.
சாலை மறியல்
இதற்கிடையில், “காலை 9 மணிக்கு கல்லூரி தொடங்குவதால் அவசரம் அவசரமாக வரவேண்டியுள்ளது. தாமதமாக வந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. தாறுமாறாக ஓட்டும் வேன் ஓட்டுநர் மீது புகார் தெரிவித்தும், கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கூறி கல்லூரி முன் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கரூர் - திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்களைச் சமாதானப்படுத்திய போலீஸார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர், வரும் 6-ம் தேதி மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் பேசும்போது, ‘’கரூரைச் சுற்றியுள்ள கல்வி நிறுவனங்கள் தங்களுடைய வாகனப் போக்குவரத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசு எவ்வளவுதான் கட்டுபாடுகள் விதித்தாலும் அதை நடைமுறைபடுத்துவதில் அக்கறை காட்டினால் மட்டுமே இதுபோன்ற விபத்துகளில் இருந்து மீளலாம்’’ என்றார்.