கல்விக் கட்டண நிலுவை ரூ.150 கோடியை மே இறுதிக்குள் அரசு வழங்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

கல்விக் கட்டண நிலுவை ரூ.150 கோடியை மே இறுதிக்குள் அரசு வழங்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்
Updated on
1 min read

இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டண நிலுவைத் தொகை ரூ.150 கோடியை மே இறுதிக்குள் அரசு வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு, சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. மாநாட்டை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தொடங்கி வைத்தார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தமிழகத்தில் பல்லாயிரம் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எவ்வித காரணமுமின்றி அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இப்பள்ளிகளுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக அங்கீகாரம் வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் பாடப் புத்தகம், மிதிவண்டி, லேப்டாப், தேர்வுக் கட்டண சலுகை, கல்வி உதவித்தொகை போன்ற அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2011 முதல் 2014 வரை 3 ஆண்டுகளில் பல லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு அரசு தரவேண்டிய கல்விக் கட்டண தொகை ரூ.150 கோடி நிலுவையில் உள்ளது. அதை மே இறுதிக்குள் பள்ளிக் கல்வித்துறை தரவேண்டும். இல்லையென்றால், வரும் கல்வியாண்டில் ஒரு மாணவரைக்கூட இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பள்ளிகளில் சேர்க்க மாட்டோம். மேலும், நிலுவைத் தொகையைக் கேட்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பன உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.நரசிம்மன், பள்ளிகள் சங்க மாநிலத் தலைவர் ஏ.கனகராஜ், பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார், பொருளாளர் டாக்டர் ஆர்.நடராஜன் ஆகியோர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in