

சீனாவில் இருப்பதைப் போன்று பொறியியல் பட்டதாரிகளின் திறமையை மேம்படுத்த தேசிய அளவில் தனி அமைப்பு ஏற்படுத்தப் பட வேண்டும் என்று கான்பூர் ஐஐடியின் தலைவர் மு.அனந்த கிருஷ்ணன் யோசனை தெரிவித்துள் ளார்.
சென்னை ஐஐடி பழைய மாண வர் தொழில் நிறுவன கலந்துரை யாடல் மையம் சார்பில் ‘பால்ஸ்-4’ தொடர் நிகழ்ச்சியின் நிறைவுவிழா ஐஐடி நூலக அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், கான்பூர் ஐஐடியின் தலைவர் மு.அனந்த கிருஷ்ணன், பேசியதாவது:
நம் நாட்டில் ஆண்டுதோறும் பொறியியல் முடித்துவிட்டு வெளியே வரும் மாணவர்களில் 10 லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பொறியியல் மாண வர்களின் திறமையை மேம்படுத்த தேசிய அளவில் தனி நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டும்.
இத்தகைய அமைப்பு சீனாவில் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் பொறியியல் படிப்பை முடிக்கிறார்கள். அவர் களுக்கு தகவல் தொடர்புத் திறன், செய்முறை அனுபவம் போன்ற திறமைகள் இல்லாததை ஆய்வுசெய்து கண்டறிந்துள்ளனர். திறமை மேம்பாட்டு நிறுவனம் மூலம் அவர்களின் திறமைகளை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. நாமும் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். பொறியியல் கல்விக்கென தனி கல்விக்கொள் கையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அனந்தகிருஷ்ணன் பேசினார்.
சிடிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத்தலைவர் சந்திரசேகரன் பேசும்போது, “பட்டப் படிப்பை முடிக்கும் மாணவர்களில் 80 சதவீதம் பேர் வேலைக்குத் தகுந்தவர்களாக இல்லை. அவர்களின் திறமையை மேம்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இன் றைய வேலைவாய்ப்புச் சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்” என்றார்.
தொடர் நிகழ்ச்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசை சென்னை கேசிஜி தொழில்நுட்பக் கல்லூரியும், 2-வது பரிசை இந்துஸ்தான் பல்கலைக்கழகமும், 3-வது பரிசை பிரதியுஷா தொழில்நுட்பக் கல்லூரியும் பெற்றன.