

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்தார்.
அகில இந்திய ஆயுர்வேத கூட்டமைப்பு (தமிழ்நாடு மாநிலக்குழு) சார்பில் “பன்றிக்காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் எஸ்.தன்வந்திரி பிரேம்வேல் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் டாக்டர் சி.சாம்ராஜ், பொருளாளர் டாக்டர் என்.கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கலந்தாய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:
ஆயுர்வேத மருத்துவம் தமிழகம் மற்றும் கேரளாவில் பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் 700 ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேத மருத்துவத்தை பயன்படுத்தியதற்கான கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் தற்போது தமிழகத்தில் ஆயுர்வேத மருத்துவ பயன்பாடு குறைந்துள்ளது. தமிழக அரசு ஆயுர்வேத மருத்துவத்தின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசும் தேவையான உதவிகளை செய்யும் என்றார்.
பின்னர், அமைச்சர் ஸ்ரீபத் நாயக் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இடத்தை தேர்வு செய்தபின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். ஆயுர்வேத மருத்துவம் மூலம் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் ஆயுர்வேத மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என்றார்.
இந்த கூட்டத்தில் இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் டாக்டர் வனிதா முரளிகுமார் உட்பட ஆயுர்வேத மருத்துவர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.