7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: பெற்றோருக்கு விழிப்புணர்வு இல்லை - கிராமப்புற சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் கருத்து
விழுப்புரத்தில் பச்சிளங்குழந்தை கள் 7 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து விழுப்புரம அரசு மருத்துவமனையில் நேற்று சென்னையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும், பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் குழந்தைகள் உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 குழந்தைகள், அடுத்தடுத்து இரண்டு நாட்களில் உயிரிழந்தன. இந்த நிலையில், சென்னையில் இருந்து எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் குமுதா தலைமையில் 7 பேர் கொண்ட மருத்துவக் குழு நேற்று மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டது.
குழந்தைகள் உயிரிழந்தது குறித்து தேசிய கிராமப்புற சுகாதார திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் னிவாசனிடம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
குழந்தைகள் தனித்தனியாக இறந்தன. சிகிச்சையில் எந்த குறையும் இல்லை. ஒரு குழந்தை குறை பிரசவத்தாலும், மற்றொரு குழந்தை தாயின் ரத்த ஓட்ட அதிகரிப்பாலும் இறந்தன. மேலும் ஒரு குழந்தை, பிறந்த பிறகு இயல்புக்கு திரும்பாமல் (அதாவது பிறந்தவுடன் அழாமல் இருந்து) இறந்தது. பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் என்பது தமிழகத்தில் மாநில அளவில் 1000 குழந்தைகளுக்கு 15ஆகவும் விழுப்புரம் மாவட்டத்தில் 11ஆகவும் உள்ளது.
விழிப்புணர்வு இல்லை
கர்ப்பிணி பெண்களுக்கு அரசு அளிக்கும் தொகையில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வாங்காமல் வேறு செலவு செய் கின்றனர். மேலும், இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டால் வாயு தொல்லை ஏற்படும் என கருதி அவற்றை கர்ப்பிணி பெண்கள் தவிர்க்கின்றனர்.
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, உணவு முறைகளை சரியாக கடைப்பிடிப்பதில்லை. இதுபோன்ற காரணங்களாலேயே பச்சிளம் குழந்தைகள் உயிரிழக் கின்றன. மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.
இவ்வாறு அவர் தெரி வித்தார்.
அடிக்கடி மின் தடை: பெற்றோர் புகார்
பெண் குழந்தையை பறிகொடுத்த ஆனத்தூரைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் கூறும்போது, ‘சுகப் பிரசவத்தில் பிறந்து 27 நாளான எனது பெண் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12-ம் தேதி) மருத்துவமனையில் சேர்த்தேன். பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மின்சாரம் மீண்டும் வந்து அரை மணி நேரம் கழித்தே இங்கு இன்குபேட்டர்கள் இயங்குகின்றன. ஜெனரேட்டரை இயக்குவதே இல்லை. மருத்துவர்களின் அலட்சியத்தாலேயே குழந்தைகள் இறந்தன’ என்றார்.
