

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று நடைபெற்றது.
ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்காத தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும், ஆந்திர அரசுக்கு துணைபோகும் தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், கொல்லப்பட்ட தமிழர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும், ஆந்திர சிறைகளில் உள்ள 3000 தமிழர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க.அதியமான் தலைமையேற்றார். மக்கள் மாநாடு கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சக்திவேல் உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார்.
தமிழர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த செல்வா பாண்டியர், எழுகதிர் ஆசிரியர் அருகோ, கேரளா தமிழர் கூட்டமைப்பைச் சேர்ந்த அன்வர் பாலசிங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் இராஜ்குமார் பழனிச்சாமி, தமிழர் முன்னேற்ற கழக தென்சென்னை மாவட்டப் பொறுப்பாளர் சேகர் உள்ளிட்ட ஏராளமான தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.