

நூறு நாள் வேலை திட்டத்தில் கூலி குறைவாகவும் காலதா மதமாகவும் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டி, ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
வாணியம்பாடி தாலுகா, அம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நூறு நாள் வேலைத் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் அதே பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 மாதங் களாக கூலி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஊராட்சி அலுவலகத்தில் பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அம்பலூர் ஊராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து பணியாளர் மீனாட்சி என்பவர் கூறும்போது, ‘‘அம்பலூரில் நடந்து வரும் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு ரூ.65 முதல் 70 ரூபாய் வரை மட்டும் கூலி வழங்கப்படுகிறது. அரசு 186 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் எங்களுக்கு குறைவான கூலி வழங்கப்படுகிறது.
மேலும், வங்கி மூலம் பணியாளர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. அவ்வாறு பணம் எடுக்கும்போது, வங்கிப் புத்தகத்தில் வங்கி அதிகாரிகள் வரவு வைப்பதில்லை. இதனால் பணம் எடுக்க ஒரு முறையும், புத்தகத்தில் கணக்கு வரவு வைக்க ஒரு முறை என 2 முறை வங்கிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் 2 நாள் சம்பளம் எங்களுக்கு வீணாகிறது. இந்த முறைகள் மாற்றப்பட வேண்டும். மேலும், அரசு விதிப்படி பணியாளர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும்.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் பெண்கள் மட்டுமே அதிகமாக ஈடுபட்டு வருகிறோம். எங்களின் குடும்பச் செலவுக்கு இதை தான் நம்பியுள்ளோம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு சுமுகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.
இதையடுத்து, நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினரும் அம்பலூர் போலீஸாரும் அங்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, தகுதியான சம்பளம் பெற்றுத் தரப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.