Published : 03 Apr 2015 08:32 AM
Last Updated : 03 Apr 2015 08:32 AM

8% அகவிலைப்படி உயர்வு என அரசின் பெயரில் போலி சுற்றறிக்கை: உயரதிகாரிகள் அதிர்ச்சி; ஊழியர்கள் குழப்பம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியான சுற்றறிக்கை போலியானது என தெரியவந்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

‘மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டி.ஏ.) 8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது’ என கடந்த 30-ம் தேதி ஒரு சுற்றறிக்கை வெளியானது. ‘இந்த டி.ஏ. உயர்வு 1-1-2015 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும்’ என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. மத்திய அரசின் நிதி அமைச்சக செலவு கணக்குத் துறை சார்பு செயலாளர் ஏ.பட்டாச்சார்யா பெயரில் வெளியான அந்த சுற்றறிக்கை பல மத்திய அரசு துறைகள், மத்திய அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், அந்த சுற்றறிக்கை போலியானது என்றும், அதுபோன்ற சுற்றறிக்கை எதுவும் செலவுக் கணக்குத் துறையால் அனுப்பப்படவில்லை என்றும் மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், துறைகளுக்கு செலவுக் கணக்குத் துறை இயக்குநர் சுபாஷ் சந்த் நேற்று முன்தினம் (ஏப்ரல் 1) ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ‘‘மார்ச் 30-ம் தேதியிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு அனுப் பப்பட்ட சுற்றறிக்கை போலியானது. அதன் அடிப்படையில் அமைச்சகங்கள், துறைகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம்’’ என அதில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன் கூறியதாவது:

மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 107 சதவீதம் டி.ஏ. பெறுகின்றனர். 1-1-2015 முதல் மேலும் 6 சதவீத டி.ஏ. வழங்கப்பட வேண்டும். வழக்கமாக ஜனவரி 1-ம் தேதி முதல் வழங்கவேண்டிய கூடுதல் டி.ஏ., ஏப்ரல் முதல் வாரத்தில் ஊழியர்களுக்கு கிடைக்கும் வகையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

எனவே, டி.ஏ. உயர்வு தொடர்பான அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வரும் என ஊழியர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில், மார்ச் 30-ம் தேதியிட்ட இந்த சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை வெளியானது. 6 சதவீதம் மட்டுமே டி.ஏ. உயர்வு அறிவிப்பு வரவேண்டிய நேரத்தில், 8 சதவீத உயர்வு என அதில் கூறப்பட்டிருந்ததால் சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து எங்கள் சம்மேளனம் சார்பில் மத்திய நிதி அமைச்சகத்தின் கவனத்துக்கு உடனே எடுத்துச் சென்றோம். அந்த சுற்றறிக்கையை ஆராய்ந்த நிதி அமைச்சகம், அது போலியானது என தற்போது கூறியுள்ளது.

மத்திய அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்தே பட்ஜெட் உள்ளிட்ட ரகசிய ஆவணங்கள் களவாடப்பட்ட நிகழ்வு சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது மத்திய அரசின் பெயரிலேயே போலி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் போக்கானது அரசு நிர்வாகம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்புகிறது. அரசு நிர்வாகத்தில் உரிய பாதுகாப்பு இல்லாததை இது காட்டுகிறது. இந்த பாதுகாப்பு குறைபாடு உடனே களையப்பட வேண்டும். இல்லாவிட்டால், அரசு நிர்வாகம் என்பதே அர்த்தமற்றதாகிவிடும்.

வழக்கம்போல, ஏப்ரல் முதல் வாரத்தில் ஊழியர்களுக்கு டி.ஏ. உயர்வு கிடைக்குமாறு மத்திய அரசு அறிவித்திருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது. மத்திய அரசு தாமதம் செய்ததால் விஷமிகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் டி.ஏ. உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு துரைபாண்டியன் கூறினார்.

மத்திய அரசின் பெயரில் போலி சுற்றறிக்கை வெளியாகியிருப்பது ஊழியர்கள் மத்தியில் குழப்பத் தையும் உயரதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி யுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x