

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது, நேற்று பிரதமர் நரேந்திர மோடியிடம் விருது பெற்றார்.
ஆண்டுதோறும் ஏப்.21-ல் குடிமைப்பணி நாளாக அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, சிறப்பாக செயல்படும் குடிமைப்பணி அலுவலர்களுக்கு பதக்கத்துடன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையை பிரதமர் வழங்குவார்.
அதன்படி, 9-வது குடிமைப்பணி நாளை கொண்டாடும் வகையில் 2012- 13-ல் தொடங்கி 2 ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றிய குடிமைப்பணி அலுவலர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சிசுக்கொலை மற்றும் கருக்கொலை உள்ளிட்ட காரணங்களால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருந்து வந்ததை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டதால் 2010-11-ல் 1000: 851 என்பதாக இருந்த ஆண்- பெண் குழந்தைகள் விகிதம் 2012-13-ல் 1000:1016 என உயர்ந்தது.
பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது மேற்கொண்ட சிறந்த செயல்பாடுகளை பாராட்டி நேற்று அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இதே செயல்பாடுகளுக்காக 2013-ல் சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம், ஆட்சியர் தரேஸ் அகமது விருது பெற்றுள்ளார்.
தரேஸ் அகமது நிர்வாகத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 351 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டள்ளன. இதில் 68 குழந்தைகள் உயர் கல்வி பயிலவும், ஏனையோர் பள்ளிக் கல்வியை தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.