

திருச்சி சுங்கத்துறை அலுவலக பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து 15 கிலோ தங்கக் கட்டிகள் மாயமான சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் பெட்டகத்தைக் கையாளும் அதிகாரிகள் இருவரை ஆணையர் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த மாதம் காரில் கடத்தி வரப்பட்ட 18.5 கிலோ தங்கக் கட்டிகளை திருவாரூரில் சுங்கத் துறையினர் கைப்பற்றினர். இவை திருச்சி அலுவலக பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பான வழக்கு விசாரணை திருவாரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ள தங்கக் கட்டிகளை சுங்கத் துறை ஆய்வாளர் சரிபார்க்கச் சென்றுள்ளார். அப்போது, பாதுகாப்புப் பெட்டகத்தில் தங்கக் கட்டிகள் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து உயரதிகாரிகள் பார்த்தபோது, 3.5 கிலோ தங்கக் கட்டிகள் மட்டுமே இருந்ததும், 15 கிலோ தங்கக் கட்டிகள் காணாமல்போனதும் தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.3.5 கோடியாகும்.
சிபிஐ விசாரணை
திருச்சி சுங்கத்துறை அலுவல கத்தில் தங்கம் திருட்டுபோனது தொடர்பாக ஏப்.20-ம் தேதி சென்னையில் உள்ள தென்னிந் திய சுங்கத்துறை முதன்மை ஆணையரும், இணை இயக்கு நரும் ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தி, மாயமான தங்கக் கட்டிகள் தொடர்பான விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே திருச்சி சுங்கத் துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த 3 தினங்களாக துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வந்தது. பாதுகாப்புப் பெட்டகத்தை கையாளும் 2 அதிகாரிகள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தெரியவருகிறது.
இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம் தொடர்பாக திருச்சி சுங்கத்துறை ஆணையர் ஜானியை சந்திக்க அலுவலகம் சென்றபோது, அவர் யாரையும் பார்க்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.