Last Updated : 17 May, 2014 09:14 AM

 

Published : 17 May 2014 09:14 AM
Last Updated : 17 May 2014 09:14 AM

தனித்துப் போட்டியிட்டு வரலாறு படைத்த அதிமுக

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டி யிட்டு அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல் திராவிடக் கட்சி என்ற பெருமையை அதிமுக பெற்றுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 1967-க்குப் பிறகு திராவிட கட்சிகளின் கைதான் ஓங்கியிருக் கிறது. ஆனாலும், எந்த திராவிடக் கட்சியும் தனித்துப் போட்டியிட்டு பெரிய வெற்றியை பெற்றதே இல்லை. மொழிவாரி மாநிலங்கள் பிரிவினைக்கு முன்பு 1952-ல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலை திமுக புறக்கணித்தது.

அதன்பிறகு 1956-ல் திருச்சியில் நடந்த மாநாட்டில்தான், தேர்தலில் போட்டியிடுவதென்று முடிவு செய் யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1957-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக திமுக தனித்து களம் கண்டது. அப்போது சில தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.

ஆனால், 1962-ல் ராஜாஜியின் சுதந்திரா கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக ளுடன் இணைந்து முதல்முறையாக கூட்டணியில் போட்டியிட்டது. எனினும் சொல்லிக் கொள்ளும் வகையில் வெற்றி கிடைக்க வில்லை. 1967-ல் நடந்த மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் சுதந்திரா கட்சி, முஸ்லிம் லீக் மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுடன் திமுக கூட்டணி சேர்ந்தது. அப்போது 36 மக்களவைத் தொகுதிகளில் அக்கூட்டணி வென்றது. முதல் முறையாக சட்டசபையையும் திமுக கைப்பற்றியது. 1971 மற்றும் 1980 தேர்தல்களிலும் காங்கிரஸுடன் இணைந்து திமுக போட்டியிட்டது.

எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பிறகு 1977-ல் முதல்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டபோதும், கூட்டணி அமைத்தே களம் கண்டார். காங்கிரஸ் கட்சியுடன் அணி அமைத்து, 20 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் அதிமுக வென்றது.

அதன்பிறகு, 1980-ல் ஜனதா கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்ட அதிமுக 2 இடங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது. அந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பிறகு அதிமுகவும் திமுகவும் மாறி மாறி கூட்டணி அமைத்தே மக்களவைத் தேர்தலை சந்தித்து வந்தன.

முதல்முறையாக தனித்துப் போட்டி

திராவிட கட்சிகளின் தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக இந்த மக்களவைத் தேர்தலில்தான் அதிமுக தன் பலத்தை மட்டுமே நம்பி தனித்துப் போட்டியிட்டது. இதில், 37 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல் வரலாற்றில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்ற திரா விடக் கட்சி என்ற பெருமையை அதிமுக பெற்று சாதனை படைத் துள்ளது. அதுவும், நாடு முழுவதும் வீசிய மோடி அலையைக் கடந்து அதிமுக வெற்றி பெற்றிருப்பது வரலாற்றுச் சாதனையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x