

ஆந்திராவில் சுட்டுக் கொல்லப் பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசும், ஆந்திர அரசும் தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ. 40 லட்சம் வழங்க வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஆந்திராவில் கூலி வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர் களை மனிதாபிமானமற்ற முறை யில் ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்றதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பலியானவர்கள் ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் ரூ.3 லட்சம் தமிழக அரசு கொடுப்பது என்பது சரியானதல்ல. ஒவ்வொருவரின் இழப்பு என்பது அந்த குடும்பத்துக்கு ஈடு செய்ய முடியாதது. எனவே இறந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசும், ஆந்திர அரசும் தலா ரூ.20 லட்சம் அளிக்க வேண்டும்.
தமிழக அரசு முறையாக நடந்து கொண்டிருந்தால் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை உடனடியாக தெரிந்து நடவடிக்கை எடுத்திருக்க முடியும். சம்பவம் நடந்தபோதே தமிழக டிஜிபியோ, அவர் அந்தஸ்தில் உள்ள காவல்துறை அதிகாரி கள் தலைமையிலான குழுவோ ஆந்திராவுக்குச் சென்று விரிவான விசாரணை நடத்தியிருக்க வேண் டும். அதேபோல் அமைச்சர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் குழுவும் சென்றிருக்கலாம்.
பிரேதப் பரிசோதனையிலும் ஆந்திர மருத்துவர்கள் மட்டுமே அங்கம் வகித்துள்ளனர். அதற்கு தமிழகத்திலிருந்தும் மருத்துவ அலுவலர்கள் சென்றிருக்க வேண் டும். அவர்களது முன்னிலையி லேயே பிரேதப் பரிசோதனை நடைபெற்றிருக்க வேண்டும். அவர்களும் பரிசோதனையில் ஈடுபட்டு, மருத்துவ அறிக்கைகள் தயாரித்து தமிழக அரசிடம் சமர்ப்பித்திருக்க வேண்டும். இந்த விதிமீறலுக்கு ஆந்திர அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லா ததால் இந்த விவகாரத்தில் இன்னமும் தீர்வு எட்டமுடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் மத்திய அரசும் இந்த சம்பவத்தை கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசின் மெத்தனப் போக்கு கண்டிக்கத்தக்கது என்றார்.