மின்வாரியத்தை குளிர்வித்த கோடைமழை: நாளொன்றுக்கு 2 ஆயிரம் மெகாவாட் தேவை குறைந்தது - 2 புதிய அலகுகளில் சிக்கலைத் தீர்க்க தீவிர முயற்சி

மின்வாரியத்தை குளிர்வித்த கோடைமழை: நாளொன்றுக்கு 2 ஆயிரம் மெகாவாட் தேவை குறைந்தது - 2 புதிய அலகுகளில் சிக்கலைத் தீர்க்க தீவிர முயற்சி
Updated on
2 min read

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மின்வாரியம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது. மழை காரணமாக தமிழகத்தின் மின்தேவை நாளொன்றுக்கு 2 ஆயிரம் மெகாவாட் வரை குறைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் கோடை காலத்தில் மின்வெட்டு நிலவி வருகிறது. கடந்த ஆண்டு கோடையில் சென்னையில் தினமும் இரண்டு மணி நேரமும், மற்ற பகுதிகளில் 4 மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த ஆண்டில், மின் உற்பத்தி அதிகரித்திருப்பதாலும், தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதாலும் மின்பற்றாக்குறை பெருமளவில் இல்லை.

எனினும், இந்த ஆண்டு கோடையின் உக்கிரம் சற்று அதிகமாக இருக்கக்கூடும் என்ப தால் மின் தேவையை சமாளிக்க மின்வாரியத்தினர் முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் கோடை யின்போது தமிழகத்தில் அதிக பட்சமாக ஒரு குறிப்பிட்ட நாளில் 13,775 மெகாவாட் மின்தேவை ஏற்பட்டது. இந்த ஆண்டு, உச்சபட்ச மாக 15,000 மெகாவாட் வரை மின் தேவை ஏற்படும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இந் நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் மின்தேவை வெகு வாகக் குறைந்துள்ளது. இத னால் மின்வாரியத்தினர் நிம்மதியடைந்துள்ளனர்.

இது குறித்து எரிசக்தித்துறை உயரதிகாரிகள் கூறியிருப்பதாவது:

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மின்தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அப்போது தொடங்கி, கடந்த வாரம் வரை தினசரி மின்தேவை 12,000 முதல் 12,500 மெகாவாட்டாக உயர்ந்தது. இந்நிலையில், வியாழக்கிழமைக்கு முந்தைய மூன்று நாட்களில், தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. இதனால், குளிர்சாதன இயந்திரங்களின் பயன்பாடு பெரிதும் குறைந்தது. விவசாய நிலங்களில் மோட்டார் பம்புசெட்டுகளின் பயன்பாடும் சற்று குறைந்தது. இவற்றின் காரணமாக, நாளொன்றுக்கு மின்தேவை சராசரியாக 2 ஆயிரம் மெகாவாட் குறைந்தது.

இந்த மூன்று நாட்களிலும் தினசரி மின் தேவை 10 ஆயிரம் மெகாவாட்டாகக் குறைந் தது. இதனால், அனல் மின்நிலை யங்களிலும், நீர்மின் உற்பத்தி மின் நிலையங்களிலும் உற்பத்தி குறைக்கப்பட்டது. இதனால், நிலக்கரி மற்றும் நீரின் தேவையும் கணிசமாகக் குறைந்தது. தற்போது, நீர் மின்நிலையங்கள் மூலமாக, தினசரி ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப் பட்டுவருகிறது.

2 அலகுகளில் சிக்கல்

இனிவரும் நாட்களில், வெயி லின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். எனினும், தூத்துக்குடி யில், மின்வாரியமும்-நெய்வேலி நிலக்கரி நிறுவனமும் (என்.எல்.சி.) கூட்டாக அமைத்துள்ள தலா 500 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட இருஅலகுகளும், நெய்வேலியில் என்.எல்.சி. அமைத்துள்ள தலா 250 மெகாவாட் திறன் கொண்ட இரு விரிவாக்க அலகுகளும் மே மாத மின் தேவையைத் தீ்ர்க்க பெரிதும் உதவும்.

எனினும், மேற்கண்ட இரு திட்டங்களிலும் முதல் அலகுகளில் தற்போது தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் செயல்பாடுகள் ஒரு மாதகாலம் தாமதம் ஆகியுள்ளது. அவற்றைச் சரி செய்ய அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in