குவாரிக்காக வீட்டுமனைகள் மிரட்டி வாங்கிய விவகாரம்: சகாயத்திடம் போலீஸார் வாக்குமூலம்

குவாரிக்காக வீட்டுமனைகள் மிரட்டி வாங்கிய விவகாரம்: சகாயத்திடம் போலீஸார் வாக்குமூலம்
Updated on
1 min read

குவாரிக்காக போலீஸாரிடமிருந்து வீட்டுமனைகளை மிரட்டி வாங்கியது குறித்து ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்திடம் 9 போலீஸார் நேற்று வாக்குமூலம் அளித்தனர்.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு குறித்து சட்ட ஆணையர் உ.சகாயம் 10-வது கட்ட விசாரணையை நடத்திவருகிறார். கிரானைட் தொடர்பான புகார்கள் குறித்து அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியாக உள்ளதா என சகாயம் விசாரித்து வருகிறார். கிரானைட் குவாரி நிறுவனத்தினர் சார்பில் மிரட்டல், நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக பொதுமக்கள் அளித்த மனுக்களை போலீஸாருக்கு சகாயம் அனுப்பினார். இது தொடர்பாக இதுவரை போலீஸார் 79 வழக்குகளை புதிதாக பதிவு செய்துள்ளனர். மதுரை அருகே திருமோகூர் ஜாங்கிட் நகரில் போலீஸார் வீட்டுமனைகளை வாங்கினர். இதன் அருகே குவாரி நடத்திய பிஆர்பி நிறுவனத்தினர் 150-க்கும் மேற்பட்டோரிடமிருந்து மனைகளை வாங்கினர். வீடு கட்டவிடாமல் மிரட்டியும், கற்களை கொட்டியும் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கியதாக 15-க்கும் மேற்பட்ட போலீஸார் சகாயத்திடம் மனு அளித்திருந்தனர்.

இவர்களில் எஸ்.ஐ.க்கள் விஜயா, ஜெரால்டு, நிர்மலா, ராஜலட்சுமி, முருகேசன், ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் உட்பட 9 பேர் நேற்று சகாயத்திடம் வாக்குமூலம் அளித்தனர். வருவாய் ஆய்வாளர் துளசி பிருந்தா, வி.ஏ.ஓ. ஆனந்த் முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. மேலூர் அருகே இ.மலம்பட்டியில் 17 குடும்பத்தினரை காலி செய்துவிட்டு, அந்த இடத்தில் குவாரி நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பலரும் நேற்று வாக்குமூலம் அளித்தனர். புதிதாக சகாயம் குழுவில் சேர்க்கப்பட்டுள்ள சென்னை நில எடுப்பு பிரிவு டிஆர்ஓ முருகையா மற்றும் துணை ஆட்சியர் ராஜாராம் ஆகியோர் வருவாய்த் துறையினர் மீதான புகார்களை விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in