Last Updated : 02 Apr, 2015 10:07 AM

 

Published : 02 Apr 2015 10:07 AM
Last Updated : 02 Apr 2015 10:07 AM

திருவில்லிபுத்தூர் அருகே சிதிலமடைந்து வரும் நாயக்கர் மணிமண்டபங்கள்: தொல்லியல் துறை மீட்டு புனரமைக்க வலியுறுத்தல்

திருவில்லிபுத்தூர் அருகே மன்னர் திருமலை நாயக்கர் கட்டிய மணி மண்டபங்கள் பராமரிப்பு இன்றி ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு சிதிலமடைந்து வருகின்றன.

நாயக்க வம்சத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் திருமலை நாயக்கர். இவர் கி.பி.1625 முதல் 1659 வரை மன்னராகப் பதவி வகித்தார். கலைகளுக்கும், கட்டிடத் தொழில்நுட்பங்களுக்கும் இவர் ஆற்றிய பங்கு மிக அதிகம். மைசூர், திருவாங்கூர் ஆகிய பகுதிகளை வென்ற இவர், மதுரை, திருப்பரங்குன்றம், திருவில்லிபுத்தூர் உட்பட பல இடங்களில் பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளார்.

திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் அருகே அரண்மனை கட்டிய தோடு கோயிலில் ஊஞ்சல் மண்டபத் தையும் நிறுவிய பெருமைக்குரியவர் மன்னர் திருமலை நாயக்கர். அதுமட்டுமின்றி ஆண்டாள் மீது தீவிர பக்தி கொண்டவர். ஆண்டாள் கோயிலில் தினமும் உச்சிகால பூஜை முடிந்த பின்னரே உணவு உண்ணும் வழக்கத்தையும் பின்பற்றியவர் திருமலை நாயக்கர்.

இதற்காக ஆண்டாள் கோயிலில் உச்சி கால பூஜை முடிந்ததை அறிவதற் காக திருவில்லிபுத்தூரில் இருந்து மதுரை வரை ஒரு மைல் தூர இடைவெளியில் மணி மண்டபங்களை யும் நிர்மாணித்தார். ஆண்டாள் கோயிலில் உச்சி கால பூஜை முடிக்கப் பட்டு மணி அடிக்கப்படும். அந்த ஓசை அடுத்துள்ள மணி மண்டபம் வரை கேட்கும். அப்போது, அங்குள்ள பணியாளர் மணியை அடிப்பார்.

இவ்வாறு அடுத்தடுத்து உள்ள மணி மண்டபங்களில் மணியடிக்கப் பட்டு மதுரையில் வசிக்கும் மன்னர் திருமலை நாயக்கருக்கு மணி யோசை கேட்ட பின்னரே மதிய உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், கருங்கற் களால் கட்டப்பட்டிருந்த மணி மண்டபங்கள் தற்போது இருந்த இடம் தெரியாமல் சிதைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளால் மறைக்கப்பட்டு விட்டன. தற்போது, வரலாற்றை பகரும் வகையில் திருவில்லிபுத் தூர்- மதுரை சாலையில் இந்திரா நகர், மங்காபுரம், பிள்ளையார்நத்தம் ஆகிய பகுதிகளில் மட்டுமே மணிமண்டபங்கள் எஞ்சியுள்ளன. இந்த மண்டபங்களும் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகின்றன.

இது குறித்து தமிழக தொல்லியல் கழக ஆயுட்கால உறுப்பினரும், பாண்டி நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயற்குழு உறுப்பினருமான திருத்தங்கலைச் சேர்ந்த ஆர்.பாலச்சந்திரன் கூறியதாவது:

‘‘மன்னர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட மணி மண்டபங்கள் சிறப்புக்குரியவை. தற்போது 3 இடங்களில் மட்டுமே உள்ள இந்த மணி மண்டபங்களை இந்திய தொல் லியல் அல்லது மாநில தொல்லியல் துறை மீட்டு புனரமைத்து வரலாற்று நினைவுச் சின்னங்களாகப் பராமரிக்க வேண்டும்’’ என்றார்.

பராமரிப்பு இல்லாததால் திருவில்லிபுத்தூர் அருகே இந்திரா நகர், மங்காபுரம் பகுதியில் சிதிலமடைந்துள்ள மன்னர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட மணி மண்டபங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x