

செம்மரம் கடத்தும் மாபியா கும் பலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள உறவு குறித்து வெளி மாநில நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தவேண்டும் என்று அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு வலியுறுத்தியுள்ளது.
திருப்பதி என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மனித உரிமை ஆர்வலர் அ.மார்க்ஸ் கூறியதாவது:
உள்ளூர் ஏஜென்ட்கள் மூலம் ஆந்திராவுக்கு கூலி வேலைக்கு சென்றவர்களை சுட்டுக் கொன்றுள் ளனர். ஆந்திர போலீஸாரிடம் இருந்து தப்பிய சேகர் உள்ளிட் டோரின் வாக்குமூலம் இதை உறுதிப் படுத்துகிறது என்றனர்.
எனவே, என்கவுன்ட்டர் குறித்து சிறப்பு புலனாய்வுப் படை (எஸ்ஐடி) அமைத்து விசாரிக்க வேண்டும். செம்மரம் கடத்தும் மாபியா கும் பலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள உறவு குறித்து ஆராய ஆந்திரம், தமிழகம் அல்லாத மாநிலங்களில் பணியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.
ஆந்திர சிறைகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லப்பட்ட 20 பேரின் குடும்பத்தினருக்கும் ஆந்திர அரசு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பலியான 20 பேரின் மனைவிகளுக்கும் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.