Published : 16 Apr 2015 09:17 AM
Last Updated : 16 Apr 2015 09:17 AM

விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே நாளில் 4 குழந்தைகள் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பிரசவமான குழந்தைகள் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கடந்த ஒரு வாரமாக எடைக் குறைவு, மூச்சுத் திணறல் ஏற்பட்டன. இதனால், குழந்தைகள் சிறப்புப் பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திருக்கோவிலூர் அருகே ஏமப்பூரைச் சேர்ந்த பார்வதி என்பவரின் 2 நாள் ஆண் குழந்தை நேற்று காலை 5.45 மணிக்கு உயிரிழந்தது. சிறிது நேரத்தில், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சீர்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவருடைய 3 நாள் ஆண் குழந்தை காலை 5.55 மணிக்கு இறந்தது.

இது தவிர, திருக்கோவிலூர் அருகே கோவிந்தராஜ நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கலா என்பவருக்கு சிறுமதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த ஆண் குழந்தையை எடை குறைவு காரணமாக முண்டியம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருந்தனர். இந்தக் குழந்தையும் நேற்று காலை 7.05 மணிக்கு உயிரிழந்தது.

அதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆனந்தூர் கிராமத்தைச் சேர்ந்த இந்திரலேகா என்பருக்கு 27 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்திருந்தது. அந்தக் குழந்தைக்கு உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் முண்டியம்பாக்கம் அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தது. நேற்று காலை 7.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை உயிரிழந்தது. விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 4 குழந்தைகள் உயிரிழந்ததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

பெற்றோர் புகார்

இறந்த குழந்தைகளின் உறவினர்கள் கூறும்போது, “குழந்தைகளுக்கு சிறப்புப் பிரிவு இருந்தும் போதுமான அளவுக்கு மருத்துவ சாதனங்கள் இல்லை. மருத்துவர்களும் உரிய சிகிச்சை அளிப்பதில்லை” என்றனர். இதற் கிடையே, விழுப்புரம் அருகே உள்ள சாலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 17 நாள் ஆண் குழந்தை ஒன்றும் இதே மருத்துவமனையில் கவலைக் கிடமாக உள்ளது. அந்த குழந்தை யின் தந்தை காந்த் கூறும்போது, “குழந்தைக்கு எந்த வித சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதே எங்களுக்கு தெரியவில்லை. குழந்தை உடல் நிலை மோசமாக உள்ளது என்று தெரிவித் தால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வோம். அதற்கும் அனுமதி மறுக்கின்றனர்" என்று குற்றம் சாட்டினார்.

மருத்துவமனை விளக்கம்

குழந்தைகள் இறப்பு குறித்து மருத்துவமனை ஆர்எம்ஓ மணிவண்ணனிடம் கேட்டபோது, "உயிரிழந்த குழந்தைகள் அனைத் தும் எடை குறைவாக பிறந்தவை. மேலும், மூச்சு திணறலும் உயிரிழப்புக்குக் காரணம்" என்று குறிப்பிட்டார்.

மருத்துவமனை டீன் உஷா கூறும்போது, "ஒரு குழந்தையின் எடை குறைவாக இருந்தது. ஒரு குழந்தையின் தொப்புள் கொடியில் கட்டி இருந்தது. மேலும், மூச்சுத் திணறல் பிரச்சினையும் இருந்தது. அதிக கவனம் செலுத்தினோம். வெண்டிலேட்டரில் வைத்திருந் தோம்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x