

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 3,779 பள்ளி செல்லா குழந்தை தொழிலாளர்கள் கண்டறிந்து, மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர்.
இதுகுறித்து ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் 28 சிறப்பு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தொழில் நிறுவனங்கள், செங்கல் சூளைகள், தறிப்பட்டறைகள், உணவு விடுதிகள், சாயப்பட்டறைகள், விவசாய வேலைகள், வீட்டு வேலைகள் இது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தால் 1098 என்ற இலவச தொலைப்பேசி எண் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.
சட்டவிரோதமாக குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால், ஒரு குழந்தைக்கு ரூ.20 ஆயிரம் அபராதமும், தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 3,779 பள்ளிச் செல்லா குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்று வருகிறார்கள். சிறப்பு பயிற்சி மையங்களில் படிக்கும் குழந்தை தொழிலாளர் களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.150 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
தமிழக அரசு உயர்கல்வி படிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை யும், சிறப்பு பயிற்சி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு, நோட்டு புத்தகங்கள், சீருடை உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கி வருகிறது. மாணவ, மாணவியர்களுக்கு 3 மாதத்துக்கு ஒருமுறை இலசவ மருத்துவப் பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.