

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள தேவிரப்பள்ளி கிராமம் மாநில எல்லையில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகே உள்ள முதுகானப்பள்ளியில் இருந்து மின் விநியோம் செய்யப்பட்டு வந்தது.
இதனால் சீரான மின்சாரம் இல்லாமல் மின்சாதன பொருட்கள் இயங்காமலும், விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாமலும் மக்கள் அவதிப்பட்டனர்.
மின் பிரச்சினையை தீர்க்கக் கோரி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு இப்பகுதி மக்கள் மனு மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இப்பகுதியில் 4 இடத்தில் புதிய டிரான்ஸ் பார்மர்கள் அமைக்க மின்வாரியத் திற்கு உத்தரவிடப்பட்டது. தற்போது 3 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா, ஓசூர் நகராட்சித் தலைவர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமையில் நடந்தது. தேவிரப்பள்ளியைச் சேர்ந்த 120 வயது மூதாட்டி கவுரம்மா புதிய டிரான்ஸ்பார்மரை செயல்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் திறந்து வைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வயது முதிர்ந்தவர் மூலம் திறந்து வைத்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.