

ஆந்திர வனப்பகுதியில் செம்மர கடத்தல் தொடர்பாக 20 தமிழர் கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து தாக்குதல் நடத்தப் படலாம் என்பதால் தமிழகத்தில் உள்ள ஆந்திர நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. கோயம்பேட்டில் 8 ஆந்திர பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஆந்திர நிறுவனங்களான ஆந்திரா வங்கி, ஆந்திரா கிளப், ஆந்திரா சபா, ஆந்திரா மெஸ், ஆந்திரா பேருந்துகள் மற்றும் தமிழக எல்லையில் ஆந்திர மக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தி.நகரில் உள்ள ஆந்திரா கிளப்பை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
போலீஸ் பாதுகாப்பையும் மீறி கிளப் கட்டிடத்தின் மீது சிலர் கற்களாலும், கம்புகளாலும் தாக்கினர். கோயம்பேட்டில் ஆந்திர அரசுக்கு சொந்தமான 8 பேருந்துகளை தாக்கிய கும்பலைச் சேர்ந்த 2 பேர் பிடிபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் இருந்து திருப்பதி, நெல்லூர் பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆந்திர அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. பூந்தமல்லியில் திருப்பதி சென்ற தமிழக பேருந்து உட்பட 2 பேருந்துகள் கல்வீசி சேதப்படுத்தப்பட்டன. இதன்பேரில் 2பேரை போலீஸார் கைது செய்தனர்.