

குடியால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நீதிகேட்டு, 'பொதுவிசாரணை’ என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களில் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம், மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை தமிழகத்தில் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூரில், ‘பொது விசாரணை’ நிகழ்வு நேற்று நடந்தது.
மதுவால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சங்கமிக்கும் ஒரு நிகழ்வாக இதை நடத்திக்காட்டினர் மாதர்சங்கத்தினர். இந்நிகழ்வில் பங்கேற்றோர் பேசியதாவது:
ஆனந்த் (11): நான் தற்போது விடுதியில் தங்கிப்படித்து வருகிறேன். அப்பா அன்றாடம் குடித்துவிட்டு, அம்மாவை அடித்து கொண்டே இருந்தார். குடிப்பழக்கத்தால், அப்பாவும், அம்மாவும் பிரிந்து வாழ்கிறார்கள். நிம்மதி இழந்துவிட்டோம். நான் கேட்பது, இன்னும் என்னைப்போல், எத்தனை குடும்பங்கள் அழிந்தால் இதற்கு தீர்வு கிடைக்கும்? எங்களைப் போல் எத்தனை குடும்பங்களை இந்த அரசு சீரழிக்கப் போகிறது?. என்றார்.
சித்ரா (28): திருமணம் முடிந்து 7 வருடம் ஆகிவிட்டது. கணவர் தினமும் குடித்துவிட்டு என்னை அடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருநாள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியபோது, சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். நான் தற்போது எனது குழந்தைகளுடன், உழைத்து வாழ்ந்து வருகிறேன். குடிக்க வேண்டாம் என பலமுறை கெஞ்சி காலில் விழுந்து கதறி அழுதிருக்கிறேன். ஆனால், அப்போது அவர் கேட்கவில்லை. இன்றைக்கு எங்கள் குடும்பத்தின் நிலையை கேட்க யாரும் இல்லை என்றார்.
நாகராஜ் (28): நான் பல ஆண்டு காலமாக குடிப்பழக்கத்துக்கு அடிமை. என் மனைவி எத்தனை முறை கூறியும், என்னால் குடிப்பழக் கத்தில் இருந்து மீளமுடியவில்லை.
அளவுக்கு அதிகமான குடிப்பழக்கத்தால், என் மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாள். அவளைக் காப்பாற்ற முயற்சித்தேன். ஆனால், அதற்குள் அவள் இறந்துவிட்டாள். ஓர் உயிர் பிரிந்துதான், எனக்கு குடியின் கோரத்தை உணர்த்தியுள்ளது.
ஆனால், நான் மட்டும் பிழைத்துக் கொண்டேன். தற்போது முகம் வெந்து, ஒரு கையை இழந்து 3 குழந்தைகள் உடன் வாழ்ந்து வருகிறேன். எனது அத்தை தான், ஒரு தாயாக எனது 3 குழந்தைகளையும், என்னையும் பார்த்துக்கொள்கிறார். இன்றைக்கு பள்ளி மாணவர்கள் கூட குடிப்பது வேதனையாக இருக்கிறது. பிஞ்சு வயதில் குடிக்க ஆரம்பித்தால், என் வயது வரும்போது அந்த மாணவனின் நிலை தான் என்ன?. என்றார்.
மாநில துணைத் தலைவர் அமிர்தம் பேசியதாவது: தமிழகத்தில் மது உற்பத்தியை குறைப்பது. பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து மற்றும் ரயில் நிறுத்தங்கள், மாநில தேசிய, நெடுஞ்சாலைப் பகுதிகளில் மதுக்கடைகளை அகற்ற வேண்டும். 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு, மது விற்பனை செய்யக்கூடாது என வயது வரம்பு நிர்ணயித்து, சட்டத்தை கடுமையாக்க வேண்டும். வாரத்துக்கு 2 அல்லது 3 நாள் மட்டும், மதுக்கடைகளைத் திறந்து, மது விற்பனை செய்வது என படிப்படியாக மதுவிலக்கை தமிழகத்தில் கொண்டு வரலாம். குடியால், சீரழிந்த, சீரழிந்து கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலையை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் விதமாக, இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் அங்குலட்சுமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.சாவித்திரி வரவேற்றார். அகில இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத்தலைவர் செ.முத்துக்கண்ணன், உளவியலா ளர் வாசுகி என பலர் பங்கேற்றனர்.