

முதல்வரின் பதிலுரையை புறக்கணித்தது ஏன் என்பது குறித்து திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம், பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் நேற்று வெளிநடப்பு செய்தன. பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் கூறியதாவது:
மு.க.ஸ்டாலின் (திமுக)
பட்ஜெட் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்கும்போது, 2 ஜி வழக்கு பற்றி பேசினார். ஏற்கெனவே தாது மணல் கொள்ளை குறித்தும், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் குறித்தும் பேச அனுமதி கேட்டபோது அவை நீதிமன்றத்தில் உள்ளன என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், 2ஜி வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போதே அதைப் பற்றி முதல்வர் பேசுகிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பே வந்துவிட்டது. இதுபற்றி பேசலாமா என்று கேட் டோம். அதை அனுமதிக்கவில்லை. எனவே, முதல்வரின் பதிலுரையை புறக்கணித்து வெளிநடப்பு செய் தோம்.
அமைச்சர் நீக்கம் ஏன்?
அக்ரி கிருஷ்ணசாமி குற்றம் செய்யவில்லை என்றால், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும், அமைச்சர் பொறுப்பில் இருந்தும் ஏன் நீக்கப்பட்டார். அரசுக்கு தைரியம் இருந்தால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
துரைமுருகன் (திமுக)
அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப் பட்டால் அவர் யார் பெயரையாவது வெளியில் சொல்லிவிடுவாரோ என்று பயப் படுகின்றனர்.
விஜயதாரணி, பிரின்ஸ் (காங்கிரஸ்):
வேளாண் பொறியாளர் முத்துகுமாரசுவாமி தற்கொலை வழக்கில் தமிழக காவல்துறை புலனாய்வு மேற்கொண்டால் நியாயம் கிடைக்காது. எனவே, இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும்.
ஏமன் நாட்டில் தமிழர்கள்...
ஏமன் நாட்டில் சிக்கியுள்ள பல தமிழர்கள் மீண்டுவர முடியாமல் தவிக்கின்றனர். மற்ற மாநிலங்கள் அவரவர் மக்களை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்கின்றன. ஆனால், தமிழக அரசு இந்த விஷயத்தில் அக்கறை இல்லாமல் உள்ளது.
இதை அரசின் கவனத்துக்கு கொண்டுவர முயன்றபோது, பேரவைத் தலைவர் அனு மதிக்கவில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய் தோம்.
கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்):
பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக எம்எல்ஏக்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை உள்நோக்கத்துடன் கொடுக்கப்பட்டதாகும். அந்த தண்டனையை குறைப்பது குறித்து பேச அனுமதி மறுக் கப்பட்டதால் வெளிநடப்பு செய் தேன்.
‘கொம்பன்’ திரைப்படம் குறித்து நீதிமன்றத்தில் தீர்ப்பு வருவதற்கு முன்பே, அந்தப் படம் வெளியிடப்படும் என்று விளம்பரப்படுத்துவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.