

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி ஏற்றுள்ள நஸிம் ஜைதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நஸிம் ஜைதி புதிதாக பதவி ஏற்றுள்ளார். இதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ஜைதிக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி ஏற்றுள்ள தங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். நாடு முழுவதும் நடைபெறும் தேர்தல்களை நேர்மையாக நடத்துவேன் என தெரிவித்துள்ளீர்கள். உங்களுடைய வார்த்தையை நீங்கள் காப்பாற்றுவீர்கள் என நான் நம்புகிறேன்.
மேலும், மக்களவைத் தேர்தல் நடைபெறும்போதே சட்டப் பேரவைத் தேர்தலையும் சேர்த்து நடத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இதன் மூலம், பணம் மற்றும் கால விரயம் தடுக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.