

ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆளும் அதிமுகவாகிய பினாமி அரசு மிகவும் அலட்சியமான நிலையை கையாள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், '' திருப்பதி வனப் பகுதிகளில் மரம் வெட்டிய 20 தொழிலாளிகள் சிறப்பு அதிரடிப் படையால் சுட்டு கொல்லப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சி அளித்தது.
முதலில் இறந்த அந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். செம்மர கட்டை கடத்துவோரால் இந்த ஏழை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.மர கடத்தல் சட்டவிரோதமானது அது தடுக்கப்பட வேண்டும். அதற்காக தற்காப்பு என்ற அடிப்படையில் கூட அளவுக்கு அதிகமான பலப் பிரயோகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆந்திர காவல்துறையின் செயல் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதோடு மட்டுமல்லாமல் இந்த மனிதநேயமற்ற நடவடிக்கை அந்த தொழிலாளிகள் தங்களை நீதிமன்றம் மூலம் தற்காத்துக் கொள்ளும் உரிமையையும் நிராகரித்துவிட்டது. ஆந்திர அரசு தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி விட்டது என்பது தான் என் வேதனை.
இது எதிர்பாராமல் நடந்த மோதல் அல்ல என்பதும் திட்டமிட்டு நடத்தப்பட்ட போலி படுகொலைகள் என்றும் செய்திகள் வருகின்றன. இதனால் தமிழக ஆந்திர எல்லையில் பதற்றமான சுழ்நிலை நிலவுதாக தகவல்கள் வந்தாலும் செயல்படாத இந்த பினாமி அரசு இந்த விவகாரத்தில் மிகவும் அலட்சியமான நிலையை கையாள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தேவையற்ற முறையில் நடந்த இந்த கொத்து கொத்தான கொலை குறித்து, பணியில் உள்ள நீதிபதி தலைமையில் உடனடியாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் திமுக வின் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.