

காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வாசன் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழக காங்கிரஸ் கட்சியினர் உட்கட்சி விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் பேசுவதை தவிர்க்க வேண்டும். மக்களைவை தேர்தலில் காங்கொரஸ் கட்சி தோல்வியடைய, இளைஞர்கள் மத்தியில் புதிய ஆட்சி அமைய வேண்டும் என விரும்பியது ஒரு காரணமாக இருக்கலாம். தேசிய அளவிளான பிரச்சினைகளே காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணமாகின. இருப்பினும், தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு உண்மையான காரணங்களை கண்டறிய வேண்டும்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்ற பாஜகவின் முயற்சி பிரச்சினைகளை உருவாக்கும். அவசரச் சட்டம் மூலம் பிரதமரின் முதன்மைச் செயலரை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை. இவ்வாறு வாசன் பேசினார்.
ஞானதேசிகன் வேண்டுகோள்:
இதே போல் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் விடுத்துள்ள அறிக்கையில்: "கட்சிக்குள் இருக்கும் நிறை, குறைகள் எதையும் நேரடியாகத் தெரிவியுங்கள்; பத்திரிக்கையில் அறிக்கை வெளியிட வேண்டாம்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், ஜூன் 7-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களை கலந்து கொள்ளும்படடி ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார்.