

உடன்குடி அனல்மின் நிலைய திட்டத்துக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விரிவான விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், உடன்குடி அனல் மின்நிலைய திட்டம் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் மற்றும் டெண்டர் ரத்து தொடர்பாக திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, பாமக ஆகியவை சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தன. அதன் மீதான விவாதத்தில் பேசிய உறுப்பினர்கள், இந்தப் பிரச்சினை தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:
உடன்குடியில் அனல் மின்நிலையம் அமைப்பது தொடர்பாக 2007-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது பாரத மிகுமின் நிறுவனத்துடன் (பெல்) புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. 4 ஆண்டு காலத்தில் அந்தத் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் இப்போது மின் உற்பத்தி கிடைத்திருக்கும். ஆனால், 4 ஆண்டு காலம் திமுக அரசு ஒன்றுமே செய்யவில்லை.
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 2012-ம் ஆண்டு பிப்ரவரி 24-ல் உடன்குடி மின் திட்டத்துக்கான நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. 2013 அக்டோபரில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத் தது.
இதற்கிடையே, 4 நிறுவனங்கள் டெண்டர் கோரின. அவற்றில் 2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஒன்று சீன நிறுவனம். மற்றொன்று பெல் நிறுவனம். இந்த டெண்டர்களில் மாறுபட்ட வர்த்தக முரண்பாடுகள் இருந்ததால் முடிவு செய்ய தாமதம் ஆனது. 2.6.2014 அன்று டெண்டர் திறக்க மின்சார வாரியம் ஒப்புதல் அளித்தது. இதற்கிடையே சீன நிறுவனம், பெல் நிறுவனத்தை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்றது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆண்டு அக்டோபர் 18-ல் டெண்டர் திறக்கப்பட்டது. ஒளிவு மறைவற்ற டெண்டர் முறையை கடைபிடிப்பதால் 2 நிறுவனங்களின் டெண்டர் குறித்து ஜெர்மனி நிறுவனத்தை கொண்டு சரி பார்க்கப்பட்டது.
ஜெர்மனி நிறுவனம் அளித்த அறிக்கையில் 2 டெண்டர்களிலும் உள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன.
எனவே, அவற்றை ஏற்றுக்கொண்டால் மற்றவர்கள் குறை சொல்ல நேரிடும் என்பதால் 2 டெண்டர்களையும் ரத்து செய்வது என்று கடந்த மார்ச் 13-ம் தேதி நடந்த மின் வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில்தான் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப் பட்டன. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் முடித்து வைக்கப்பட்டது. இந்த திட்டம் தாமதத்துக்கும், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கும் அரசு காரணம் அல்ல.
தனியாரிடமிருந்து கூடுதல் விலையில் மின்சாரம் வாங்குவதற் காகத்தான் உடன்குடி அனல்மின் திட்டத்தை காலதாமதம் செய்வதாகவும், டெண்டர் ரத்து செய்யப்பட்டதாகவும் திமுக தலைவர் கருணாநிதி கூறுகிறார். அதிக விலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்தது திமுகதான். என்னென்ன விலையில், எவ்வளவு மின்சாரம் வாங்கினீர்கள், அதற்கு எவ்வளவு செலவு செய்தீர்கள் என்ற முழு விவர பட்டியலும் எங்களிடம் இருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.