ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியர் தற்கொலை: அதிகாரிகளின் நெருக்கடி காரணமா?

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியர் தற்கொலை: அதிகாரிகளின் நெருக்கடி காரணமா?
Updated on
1 min read

ராமநாதபுரம் ‘சி’ பிளாக் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவுப் பிரிவில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்தார். நேற்று காலை 8 மணியளவில் அலுவலகம் வந்த சண்முகவேல், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலி யாக உள்ள 219 சமையல் உதவி யாளர் பணிக்கு நேரடி நியமனம் நடைபெற்று வரும் நிலையில், அத்துறை ஊழியர் தற்கொலை செய்துள்ளதால், காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவைத் தொடர்ந்து கேணிக்கரை போலீஸார், தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து சண்முகவேல் மகன் தாமரைக்கனி கூறும்போது, நேற்று முன்தினம் இரவு எனது தந்தைக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் யாரிடமோ சத்தம்போட்டு பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று காலையிலும் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியதும் உடனே அவர் புறப்பட்டு அலுவலகம் சென்றார். சிறிது நேரத்தில் அவர் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டதாக எங்களுக்குத் தகவல் வந்தது என்றார்.

சடலத்தை வாங்க மறுப்பு

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்ட ஊழியருடன் பணியாற்றும் அதிகாரி உட்பட 3 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி சடலத்தை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

சண்முகவேலின் மனைவி வெண்ணிலா போலீஸாரிடம் அளித்த மனுவில், சத்துணவு பிரிவில் பணியாற்றும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணபதி, உதவியாளர் செந்தில், இளநிலை உதவியாளர் மதியழகன் ஆகி யோர்தான் கணவரின் தற்கொலைக்குக் காரணம். இவர்கள் 3 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்தக் கோரிக்கையை எஸ்சி, எஸ்டி ஊழியர் சங்க நிர்வாகி களும் போலீஸாரிடம் வலியுறுத்தி னர். ராமநாதபுரம் வட்டாட்சியர் சுரேஷ்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாமலை ஆழ்வார் ஆகியோர் கோரிக்கை குறித்து உரிய விசாரணை நடத்தப் படும் என உறுதி அளித்தனர். ஆனாலும், வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையின் நகலை வழங்கும்வரை சடலத்தை வாங்க மாட்டோம் எனக் கூறி உறவினர்கள் திரும்பிச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in