Published : 09 Apr 2015 05:55 PM
Last Updated : 09 Apr 2015 05:55 PM

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு தலைவர்கள் புகழஞ்சலி

எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டு புகழஞ்சலி தெரிவித்துள்ளனர்.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்): ''இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்திற்கு சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் மூலம் காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்த ஜெயகாந்தன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

60 களின் தொடக்கத்தில் அவர் ஆனந்த விகடனில் எழுதிய முத்திரை கதைகளில் மனதைப் பறிகொடுத்தேன். யுக சந்தி, அக்னிப் பிரவேசம், உண்மை சுடும் பொய் வெல்லும் உள்ளிட்ட அவரது சிறுகதைகள் புதுமைப்பித்தனின் வாரிசாகவே அவரைப் பறைசாற்றின. சில நேரங்களில் சில மனிதர்கள், யாருக்காக அழுதான், உன்னைப் போல் ஒருவன், ஒரு மனித ஒரு வீடு ஒரு உலகம், ருணையினால் அல்ல போன்ற படைப்புகள் காலத்தால் அழியாதவை.

கலை இலக்கியப் பெருமன்ற மாநாடுகளில் 63, 64, 65 ஆம் ஆண்டுகளில் அவரோடு பங்கேற்று இருக்கிறேன். சமூக மாற்றத்திற்குப் புரட்சிகரமான சிந்தனைகளை தனது எழுத்தில் வழங்கிய ஜெயகாந்தன் மறைந்தாலும், அவரது படைப்புகள் காலத்தால் அழியாது சிறக்கும்.''என்று வைகோ கூறியுள்ளார்.

ராமதாஸ்(பாமக நிறுவனர்): ''தலைசிறந்த தமிழ் எழுத்தாளரான ஜெயகாந்தன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

தமிழ் இலக்கிய வரலாற்றை எழுத வேண்டுமானால் ஜெயகாந்தனை தவிர்த்துவிட்டு எழுத முடியாது. 145 சிறுகதைகளையும், 41 புதினங்களையும் எழுதியவர். நான்கு தலைப்புகளில் தமது வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்தவர். இவரது படைப்புகள் ஒவ்வொன்றிலும் வாழ்க்கைக்குத் தேவையான ஏதேனும் ஒரு பாடம் நிச்சயமாக இருக்கும். ஞானபீட விருதையும், சாகித்ய அகாடமி விருதையும் பெற்றவர். பொதுவுடமைக் கொள்கைகளில் நம்பிக்கைக் கொண்டவர் என்ற போதிலும், காமராஜரின் அன்புக்கு பாத்திரமாகி அக்கட்சிக்காக உழைத்தவர்.

புகழின் உச்சங்களைத் தொட்டவர் என்ற போதிலும் எளிமையானவர்; யதார்த்தமானவர். எந்தக் காலத்திலும் தமது சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவர். இவரது மறைவு இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

விஜயகாந்த்(தேமுதிக தலைவர்): ''தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பினால் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

ஜெயகாந்தன் சுயமரியாதை இயக்கம் மற்றும் கம்யூனிச சித்தாந்தங்களால் கவரப்பட்டு சமூகத்தின் சமதத்துவத்திற்காக தன் எழுத்துகளை அர்ப்பணித்தவர். தமிழ் இலக்கிய வட்டத்தில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர். இலக்கிய உலகில் மட்டுமல்லாமல் சினிமா, அரசியல் என பல தளத்திலும் முத்திரை பதித்தவர். இவர் இலக்கியத்தின் உயர்ந்த விருதுகளான சாகித்ய அகாடமி, ஞானபீடம் விருது, பத்மபூஷன் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த ஒரு மாமனிதரை இழந்திருப்பது தமிழகத்தின் இலக்கியம், சினிமா, அரசியல், மற்றும் சமூகம் என அனைத்து தரப்பிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் ( தமிழக காங்கிரஸ் தலைவர்): ''தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளரும், தேசியவாதியுமான ஜெயகாந்தன் மறைவு செய்தி அறிந்து துயரமும், வேதனையும் அடைந்தேன்.

முறையான கல்வி பயிலாமல் எழுத்துலகில் சாதனைகளை படைத்து ஞானபீட விருது, பத்மபூஷண் போன்ற விருதுகளை பெற்றவர் ஜெயகாந்தன். இவர் மேடைப் பேச்சில் பள்ளிப் பருவத்திலேயே ஈர்க்கப்பட்ட பலரில் நானும் ஒருவன். எதையும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று நறுக்கென பேசக்கூடிய துணிவைப் பெற்றவர்.

தமிழகத்தில் தேசியத்தை வளர்க்க பெருந்தலைவர் காமராஜரின் பிரச்சார பீரங்கியாக வலம் வந்தவர் ஜெயகாந்தன். காங்கிரஸ் கட்சிக்காக ஜெயபேரிகை, ஜெயக்கொடி, நவசக்தி ஆகிய நாளேடுகளில் ஆசிரியராக இருந்து கருத்துப் போர் தொடுத்தவர் ஜெயகாந்தன். இன்று காங்கிரஸ் கட்சியில் உள்ள ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஜெயகாந்தனுடைய பேச்சினால் பாதிப்புக்கு உள்ளானவர்களாகத் தான் இருக்க முடியும்.தமிழகமே பெருமைபடத்தக்க தேசிய சிந்தனையாளர் ஜெயகாந்தன்'' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்): ''மாபெரும் மார்க்சீய, பொதுவுடமை சிந்தனையாளரும், ஞானபீட விருது பெற்ற எழுத்தாளருமான தோழர் ஜெயகாந்தன் அவர்கள் தனது 80வது வயதில் மரணமடைந்து விட்டார். இலக்கிய உலகில் என்றும் மரணமில்லா பெருவாழ்வு வாழும் தகுதியைப் பெற்றுள்ள எழுத்தாளர் ஜெயகாந்தனின் மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை தருகிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் தோழர் ஜெயகாந்தன் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமும், ஜனசக்தி அச்சகமும் ஜெயகாந்னின் தாய் வீடு. அரசியல், இலக்கியம், வாழ்க்கை ஆகிய அனைத்தையும் தொடக்கக் கல்வியாக பெற்ற இடமும் இந்த அலுவலகங்கள் தான். தனது இறுதி மூச்சு வரை கம்யூனிசக் கொள்கையின் மீது கொண்ட உறுதிபாட்டில் வாழ்ந்து காட்டியவர் ஜெயகாந்தன். சோசலிச சமூக அமைப்பின் மீது எல்லையில்லா ஈடுபாட்டைக் கொண்டவர்.

தோழர் ஜெயகாந்தனின் இலக்கிய உலகம் மிக விரிந்தப் பரப்பைக் கொண்டது. இவரது சிறுகதைகளும், நாவல்களும் சமூக மாற்றத்திற்கான பங்களிப்பை செய்கின்றன. உலகில் பல மொழிகளில் இவரது படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. உயர்ந்த விருதனா ஞானபீடம் விருதை பெற்று தமிழ்க்குப் பெருமை சேர்ந்தவர். இலக்கிய பேராசான் ஜீவாவையும், மகாகவி பாரதியையும் தனது வழிகாட்டியாக ஏற்று, ஓர் இலக்கிய சகாப்தமாகவே வாழ்ந்து காட்டிய தோழர் ஜெயகாந்தன்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x