Published : 05 Apr 2015 10:14 AM
Last Updated : 05 Apr 2015 10:14 AM

கிரானைட் முறைகேட்டை விசாரித்து வரும் சகாயம் குழுவில் புதிய பெண் அதிகாரி

கிரானைட் முறைகேட்டை விசாரித்து வரும் சட்ட ஆணையர் உ.சகாயம் குழுவில் பெண் துணை ஆட்சியர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் விசாரித்து வருகிறார். இவரது குழுவில் ஏற்கெனவே 6 பேர் செயல்பட்டனர். இறுதி அறிக்கையை தயாரிக்க சகாயம் கேட்டுக்கொண்டதன்பேரில், மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஜெய்சிங் ஞானதுரை, முன்னாள் தணிக்கைத் துறை உதவி இயக்குநர் ராஜசேகரன், தூத்துக்குடி மாவட்ட அரசு சிறப்பு திட்ட அமலாக்கப் பிரிவு துணை ஆட்சியர் ராஜாராம், கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேலு ஆகியோர் அடுத்தடுத்து நியமிக்கப்பட்டனர்.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் நில எடுப்பு பிரிவில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் பணியாற்றிய முருகையாவும் சகாயம் குழுவில் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். மதுரையிலுள்ள சகாயம் அலுவலகத்துக்கும் முருகையா வந்து சென்றார். இன்னும் பணியை தொடங்காத நிலையில், முருகையாவுக்கு பொதுத் துறையிலிருந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முருகையா சகாயம் குழுவில் இடம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட நில எடுப்பு பிரிவில் துணை ஆட்சியராக பணியாற்றும் கீர்த்தி பிரியதர்ஷினி சகாயம் குழுவில் நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார். இவர் சிவகாசி கோட்டாட்சியர், புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை ஆட்சியராகவும் பணியாற்றியவர். கிரானைட் குவாரி அதிபர்கள் விதிகளை மீறி வாங்கிய நிலங்கள் குறித்து கீர்த்தி பிரியதர்ஷினி ஆய்வு மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x