

வேளாண் அதிகாரி முத்துக்குமார சாமி தற்கொலை வழக்கில், தலைமைப் பொறியாளர் செந்தில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நெல்லை வேளாண் துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற் கொலை வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் தலைமைப் பொறி யாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பாளையங் கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தலைமைப் பொறியாளர் செந்தில் ஜாமீன் கேட்டு, நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு ஏப்ரல் 16-ம் தேதி தள்ளுபடியானது. இதையடுத்து செந்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், வேளாண் துறை யில் 7 டிரைவர்கள் நியமனத்துக்கு அமைச்சருக்கு வழங்க ரூ.11 லட்சம் பணம் கேட்டு நான் தொந்தரவு செய்ததால் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதாக என் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிந்து என்னை கைது செய்தனர். என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை.
பணி நியமனம் செய்யும் அதிகாரம் எனக்குக் கிடையாது. நான் சென்னையில் பணியாற்று கிறேன். முத்துகுமாரசாமி நெல்லையில் இறந்துள்ளார். அவரது இறப்புக்கும், எனக்கும் தொடர்பு இல்லை. நான், ஓய்வு பெறும் நிலையில் உள்ளேன். எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் ராஜராஜன் வாதிடும்போது, சிபிசிஐடி போலீஸ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தர வேண்டும் என்றார். இதையடுத்து, விசாரணையை வரும் 29-க்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.