

கோடை விடுமுறையை ஒட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுமுறைக்கால நீதிமன்றங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4 அமர்வுகளுடன் இந்த நீதிமன்றம் செயல்படும்.
ஆண்டுதோறும் கோடை விடுமுறையை ஒட்டி சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் விடுமுறை விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மே 1-ம் முதல் 31-ம் தேதி வரை உயர் நீதிமன்றத்துக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை விடப்படுகிறது.
அச்சமயத்தில் விடுமுறைக்கால நீதிமன்றம் செயல்படும். 4 அமர்வுகளாக இந்த நீதிமன்றம் செயல்படும். இதன்படி, முதலாவது அமர்வில் நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், எஸ்.மணிகுமார், எஸ்.விமலா ஆகியோர் வழக்குகளை விசாரிப்பர். இரண்டாவது அமர்வில் நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, கே.ரவிச்சந்திரபாபு, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் வழக்குகளை விசாரிப்பர்.
மூன்றாவது அமர்வில் நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆர்.மகாதேவன், கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் வழக்குகளை விசாரிப்பர். நான்காவது அமர்வில் நீதிபதிகள் வி.தனபாலன், எஸ்.வைத்யநாதன், பி.தேவதாஸ் ஆகியோர் வழக்குகளை விசாரிப்பர். இத்தகவலை, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.