

அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் பாலு நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
வயர் மூலம் ஒளிபரப்பப்பட்டு வந்த கேபிள் டிவி இணைப்புகளை 2012-ம் ஆண்டில் மத்திய அரசு தடை செய்தது. ‘செட் ஆப் பாக்ஸ்’ என்ற டிஜிட்டல் முறையில் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து கேபிள் டிவி இணைப்புகளும் டிஜிட்டலாக மாற்றப்பட்டன. கேபிள் டிவி ஆபரேட்டர்கள்கூட டிஜிட்டல் பாக்ஸ்களை வைத்து ஒளிபரப்பு செய்கின்றனர். ஆனால், தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டலுக்கு மாறாமல், இன்னும் வயர் மூலம் வீடுகளுக்கு இணைப்புகளை கொடுத்து ஒளிபரப்பி வருகிறது. இது மத்திய அரசின் உத்தரவுக்கு எதிரானது.
எனவே, தமிழக அரசு கேபிள் நிறுவனத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் குமரகுருபரன், பொதுமேலாளர் பிரியா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.