Published : 21 Apr 2015 08:41 AM
Last Updated : 21 Apr 2015 08:41 AM

திமுக, அதிமுவுடன் தேர்தல் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி: இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் திட்டவட்டம்

தமிழகத்தில் திமுக, அதிமுகவுடன்தான் மற்ற கட்சிகள் கூட்டணி வைக்க வேண்டும் என்ற மரபுக்கு 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த தவறான பொருளாதாரக் கொள்கைகளையே பாஜக அரசும் பின்பற்றுகிறது.

மக்களை கடுமையாகப் பாதிக்கும் வகையிலான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவந்துள்ள மத்திய அரசைக் கண்டித்து மே 14-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.

அதேபோல, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முடக்கிவரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து ஏப்.28-ல் திருச்சியில் அறிவிக்கப்படும்.

சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தையின் மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் இல்லாததன் விளைவாகவே அரசு மருத்துவமனைகளில் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் திமுக, அதிமுகவுடன்தான் மற்ற கட்சிகள் கூட்டணிவைக்க வேண்டுமென்பது ஒரு மரபாகவே உள்ளது. இதற்கு வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

கர்நாடக அரசு காவிரியில் அணை கட்டினால் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்படும். எனவே, இரு மாநிலங்களுக்கான இப்பிரச்சினைக்கு மத்திய அரசு உடனே தீர்வு காண வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x