Published : 20 Apr 2015 07:20 PM
Last Updated : 20 Apr 2015 07:20 PM

தமிழகத்தில் 6 ஆண்டுகளில் மூளைச்சாவு அடைந்த 620 பேர் உறுப்பு தானம்

தமிழகத்தில் கடந்த 78 மாதங்களில் மூளைச்சாவு அடைந்த 620 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு தேவையானவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரன் என்ற இளைஞன், விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். ஹிதேந்திரனின் இதயம் 9 வயது சிறுமிக்கு பொருத்தப்பட்டது. இந்த சம்பவம், உடல் உறுப்பு தானம் குறித்து தமிழக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்றுத் திட்டம், 2008-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. இதற்கான தலைமை அலுவலகம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ், சாலை விபத்து மற்றும் உடலில் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல், கண்கள் உட்பட பல்வேறு உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு தேவையானவர்களுக்கு பொருத்தப்படுகிறது. இதன்மூலம் பலர் மறுவாழ்வு பெற்று வருகின்றனர்.

பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், உடல் உறுப்பு தானம் அதிகரித்து வருகிறது. இதில், தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்றுத் திட்டத்தின் மூலம் 2008-ம் ஆண்டு அக்டோபர் முதல் கடந்த மார்ச் 31-ம் தேதி வரையான 78 மாதங்களில் 620 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.

அவர்களிடம் இருந்து 125 இதயம், 60 நுரையீரல், 573 கல்லீரல், 1113 சிறுநீரகம், 4 கணையம், 2 சிறுகுடல், 590 இதய வால்வு, 938 கண்கள், 1 ரத்தக்குழாய் மற்றும் 13 பேரிடம் இருந்து தோல் என மொத்தம் 5,296 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு தேவையானவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x