

தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையும் அதற்கு காரணமான ஆந்திர மாநில அரசையும் கண்டித்து சென்னையில் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை மற்றும் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி ஆளுநர் ரோசய்யாவிடம் மனு அளித்தனர்.
திருப்பதி அருகே வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆந்திர அரசைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் ‘தமிழர் நீதிப் பேரணி’ நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை கிண்டி ரேஸ் கிளப் அருகே நேற்று மாலை 3 மணி அளவில் ஏராளமானோர் திரண்டனர். பேரணி தொடங்குவற்கு முன்பு அங்கு நடந்த கூட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தி.வேல்முருகன் தலைமை வகித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சவுந்திரராஜன் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற் றனர்.
வைகோ
கூட்டத்தில் வைகோ பேசும்போது, ‘‘ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு நீதி வேண்டும். இதுதொடர்பாக நீதிபதி தலைமையில் நீதி விசாரணையும், சிபிஐ விசாரணையும் நடத்த வேண்டும். அதற்காக தமிழக ஆளுநரிடம் மனு கொடுக்கச் செல்கிறோம். தமிழர்களை படுகொலை செய்த ஆந்திர அரசை தூக்கி எறிய வேண்டும். கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என எல்லாப் பக்கமும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. நாங்கள் இந்தியாவில் வசிப்பதே கேள்விக்குறியாக உள்ளது’’ என்றார்.
திருப்தி இல்லை
திருமாவளவன் பேசும்போது, ‘‘அப்பாவித் தமிழர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்டை மாநிலங்களில் தமிழ் சமுதாயத்துக்கு எதிரான கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். ஆந்திராவில் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். கேரளம், கர்நாடகத்திலும் தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் பிரதமரை சென்று சந்தித்தோம். அந்த சந்திப்பில் திருப்தி இல்லை’’ என்றார்.
கூட்டம் முடிந்ததும் மாலை 6.30 மணி அளவில் ஆளுநர் மாளிகை நோக்கி அனைவரும் பேரணியாக செல்ல முயன்றனர். கிண்டி மேம்பாலம் அருகே அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். முக்கியமானவர்கள் மட்டும் ஆளுநர் மாளிகைக்கு செல்ல அனுமதித்தனர். இதையடுத்து வைகோ, வேல்முருகன், திருமாவளவன் உள்ளிட்ட சிலர் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் கே.ரோசய்யாவை சந்தித்து மனு கொடுத்தனர்.