

திருப்பதியில் 20 தொழிலாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் நேரடி சாட்சிகள் 3 பேரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறக் கோரி மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றிடிபேன் மதுரை 5-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த மனு:
திருப்பதியில் 7.4.2015-ல் செம்மரம் கடத்தியதாகக் கூறி அப்பாவி தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர மாநில போலீஸார் சுட்டுக் கொன்றனர். இதில் தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட்டுள்ளது.
எங்கள் அமைப்பின் சார்பில் திருப்பதி சம்பவம் தொடர்பாக உண்மை கண்டறியும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் சேகர், பாலச்சந்தர், இளங்கோவன் ஆவர். இவர்கள் 3 பேரும், சுட்டுக் கொல்லப்பட்ட 20 தொழிலாளர் களுடன் பயணம் செய்தவர்கள்.
இவர்களில் சேகர், பாலச்சந்தர் ஆகியோர் தேசிய மனித உரிமை ஆணையம் முன் ஏப்.13-ல் ஆஜராயினர். மற்றொரு சாட்சியான இளங்கோவனிடம் புதுச்சேரியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணைய இணைச் செயலர் பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த 3 பேரும் நீதித்துறை நடுவர் வாக்குமூலம் அளிக்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இதனிடையே ஆந்திர உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், ஆந்திர போலீஸார் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையம் கூறியபடி, நேரடி சாட்சிகள் 3 பேரும் ஆந்திர நீதித்துறை நடுவரிடம்தான் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்பதில்லை. எந்த நீதித்துறை நடுவரிடமும் வாக்குமூலம் அளிக்கலாம். மேலும் தற்போது அந்த 3 பேரும் எங்கள் வசம் உள்ளனர். அவர்கள் மதுரையிலுள்ள நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த 3 பேரிடமும் வாக்குமூலம் பெற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி எஸ்.என்.தனஞ்செயன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை நீதிபதி இன்றைக்கு ஒத்திவைத்தார்.