

வரும் மே 2-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பயணம் செய்யவுள்ள மத்திய அமைச்சர்கள், தமிழக மக்களிடம் குறைகளை கேட்டு அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று மத்திய இணை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பியூஷ் கோயல் கூறும்போது, "வரும் மே 2-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பயணம் செய்யவுள்ள மத்திய அமைச்சர்கள், தமிழக மக்களிடம் குறைகளை கேட்டு அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுப்பார்கள்.
தமிழக மக்கள் நலன் காக்க மோடி அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது. தொழில்துறை, விவசாயம், மீன் வளத் துறை மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும்" என்றார்.
மின்சாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நாடு சுந்தந்திரமடைந்து 67 ஆண்டுகள் ஆனபோதிலும், தமிழக மக்களின் மின்சாரத் தேவை நிறைவேற்றப்படாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம். தமிழக அரசின் மின் தேவைகளை மத்திய அரசு நிறைவேற்றும்.
அடுத்த 2 ஆண்டுகளில், தென் இந்தியாவில் மின் பற்றாக்குறை இல்லாத நிலையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். தென் இந்தியாவுக்கு 6,000 மெ.வாட் மின்சாரம் கிடைக்கும் வகையில் பல்வேறு மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக உருவாக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்" என்றார்.