

ராணுவத்தில் பயிற்சிப் பணியின் போது, மருத்துவ தகுதியின்மை யால் வெளியேற்றப்பட்டு ஓய்வூதி யம் பெறுபவர்களை முன்னாள் ராணுவத்தினராகக் கருத வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த எஸ்.பாலாஜி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
இந்திய ராணுவத்தில் சேர்ந்த நான் பயிற்சிப் பணியில் இருந்தபோது காயமடைந்த காரணத்தால், ராணுவ வீரராக பணிபுரியத் தகுதியில்லை என்று கூறி, ஓய்வூதியம் வழங்கி வெளி யேற்றப்பட்டேன். ராணுவத்தில் பயிற்சிப் பணி காலத்தில் மருத்துவத் தகுதியின்மை காரண மாக பாதியில் வெளியேற்றப்பட்டு, ஓய்வூதியம் பெறுபவர்களை முன்னாள் ராணுவத்தினராக கருத வேண்டும் என மத்திய அரசு 2006 பிப்ரவரி 1-ம் தேதி உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2006-ம் ஆண்டில் கைத்தறி துறையில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்துக்கு முன்னாள் ராணுவத்தினர் ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தேன். அந்த தேர்வில் வெற்றி பெற்றும் எனக்குப் பணி வழங்கவில்லை. அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய பல தேர்வுகளில் வெற்றி பெற்றும்கூட பணி வழங்கவில்லை. ராணுவத்தில் பயிற்சிக் காலத்தில் பாதியில் வெளியேற்றப்படுபவர்களை முன்னாள் ராணுவத்தினராக கருதக்கூடாது என முன்னாள் படைவீரர் நலத்துறை இயக்குநர் 2008 ஜூன் 10-ம் தேதி உத்தரவிட்டிருப்பதாகக் கூறினர். அவரது உத்தரவை ரத்து செய்து, எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி மகாதேவன் பிறப்பித்த உத்தரவு:
ராணுவப் பயிற்சியில் பாதி யில் வெளியேற்றப்பட்டு ஓய்வூதி யம் பெறுபவர்களை முன்னாள் ராணுவத்தினராகக் கருத வேண் டும் என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை பின்பற்றி, தமிழக அரசு 2013 அக்டோபர் 10-ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால், முன்னாள் படைவீரர் நலத்துறை இயக்குநர் 2008-ம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு 6 வாரத்தில் பணி வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.