Published : 30 Apr 2015 07:56 AM
Last Updated : 30 Apr 2015 07:56 AM

100 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை ராஜ வீதிகளில் வலம் வந்த பெரிய கோயில் தேர்: உற்சாகத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலின் சித்திரைத் திருவிழா தேரோட்டம் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று சிறப்பாக நடந்தேறியது. தேரோட்டத்தைக் காண லட்சத் துக்கும் மேற்பட்ட பக்தர்கள் உற்சாகத்துடன் திரண்டனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயிலில் பல்வேறு காரணங்களால் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தேரோட்டம் நடைபெறாமலே இருந்தது.

பெரிய கோயில் தேரோட்டத்தை மீண்டும் நடத்த, ரூ.37 லட்சம் செலவில் 51 அடி உயரத்தில் புதிய தேர் செய்யப்பட்டு, ஏப்.20-ல் வெள்ளோட்டம் விடப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

இதைத் தொடர்ந்து, சித்திரைப் பெருவிழாவின் 15-ம் நாளான நேற்று, முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. காலை 6.35 மணியளவில் மாநில அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், ஆர்.காமராஜ், மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன், சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ரெங்கசாமி, மேயர் சாவித்திரி உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

முன்னதாக காலை 5.30 மணியளவில் பெரிய கோயிலிலிருந்து விநாயகர், சுப்பிரமணியர், தியாகராஜர், கமலாம்பாள், தனி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்பட்டு தேர் மண்டபத்தை அடைந்தனர்.

அங்கு, தியாகராஜரும், கமலாம்பாளும் பெரிய தேரில் எழுந்தருளினர். முன்னே விநாயகர், சுப்பிரமணியர்- வள்ளி- தெய்வானையுடன் கூடிய சிறிய தேர்களும், அதைத் தொடர்ந்து பெரிய தேரும், இறுதியாக அம்மன் சிறிய தேரும் அடுத்தடுத்து வடம் பிடிக்கப்பட்டன.

மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி வழியாக மக்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த தேர்கள் நண்பகல் 1.30 மணியளவில் நிலையை வந்தடைந்தன.

இந்தத் தேர்த் திருவிழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். தஞ்சையில் முதன்முறையாக தேரோட்டத்தைப் பார்த்த குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்களிடம் உற்சாகம் கரைபுரண்டோடியது.

தேரோட்டத்தையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.தர்மராஜன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x