ஒரே இடத்தில் சந்தித்த 5 தலைமுறை வாரிசுகள்

ஒரே இடத்தில் சந்தித்த 5 தலைமுறை வாரிசுகள்
Updated on
1 min read

சுயநலம், நேரமின்மை, வெறுப்பு உட்பட பல்வேறு காரணங்களால் தற்போது குடும்ப உறவுகளுக்கு இடையே நெருக்கம், புரிந்துணர்தல் வேகமாக குறைந்து வருகிறது. இத்தகைய சூழலில் மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள திருமண மண்டபத்தில், இப்ராகிம் ராவுத்தர் என்பவரின் 5 தலைமுறை வாரிசுகள் ஒட்டுமொத்தமாக நேற்று சந்தித்துக் கொண்டனர்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, விருத்தாச்சலம், விருதுநகர் எனப் பல இடங்களில் இருந்து வந்திருந்த சிறுவர்கள், சிறுமிகள் மண்டபத்தின் ஒரு பகுதியில் கூடி, ஓடிப்பிடித்து விளையாடினர். முதியவர்கள் கூட்டாக அமர்ந்து பழைய நினைவுகளை பேசி உறவுகளை வலுவாக்கிக் கொண்டிருந்தனர். மற்றொருபுறம் ஆண்கள் கூட்டம் எதையோ சீரியசாக விவாதித்துக் கொண்டிருந்தது. இடையே சுடச்சுட பிரியாணி விருந்தும் அளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பு குறித்து மேலூரைச் சேர்ந்த ஷாஜகான் கூறியதாவது:

சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள புதுப்பட்டி. எங்களது தாத்தா இப்ராகிம் ராவுத்தர் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து மேலூருக்கு குடிவந்துவிட்டார். மாட்டு வண்டி ஓட்டி பிழைப்பு நடத்திய அவருக்கு 8 ஆண், 5 பெண் குழந்தைகள். இவர்களின் வாயிலாக தற்போது 110 குடும்பங்கள உள்ளன. இதில் சுமார் 300 பேர் வாரிசுகளாக உள்ளோம். பல்வேறு இடங்களில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் எனத் தோன்றியது. இதற்காக கடந்தாண்டு எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. எனவே கடந்த 2 மாதமாக முயற்சித்து தபால், தொலைபேசி வாயிலாக அனைவரையும் தற்போது ஒருங்கிணைத்துள்ளோம்.

அமெரிக்கா, உக்ரைன், மலேசியாவில் வசிக்கும் சில குடும்பங்கள் மட்டும் பங்கேற்க முடியவில்லை. இப்ராகிம் ராவுத்தரின் 4-வது மகனான முஸ்தபாவுக்கு தற்போது 94 வயது. அவரும் இதில் கலந்து கொண்டுள்ளார். ஒரே இடத்தில் 5 தலைமுறை வாரிசுகள் ஒன்று சேர்ந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

மாற்று மத சகோதரர்களிடம் கனிவுடனும், பாசத்துடன் நடந்து கொள்ள வேண்டும், வசதியற்றவர் களுக்கு கல்வி உதவி வழங்க வேண்டும் என இந்த சந்திப்பில் முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு குடும்பத்திலும் உறவுகளைத் தேடிக் கண்டுபிடித்து ஆண்டுக்கொரு முறையாவது சந்தித்துக் கொள்ள வேண்டும் என்றார் புன்னகையுடன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in