பஸ் மார்ஷல் திட்டத்தில் முதல் வழக்கு போதையில் ரகளை செய்த இளைஞர் கைது: மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

பஸ் மார்ஷல் திட்டத்தில் முதல் வழக்கு போதையில் ரகளை செய்த இளைஞர் கைது: மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு
Updated on
1 min read

திருவைகுண்டம் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள `பஸ் மார்ஷல்’ திட்டத்தில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பஸ்ஸில் ரகளை செய்து பயணிகளுக்கு இடையூறு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருவைகுண்டம் பகுதியில் நடைபெற்ற ஜாதி மோதல்கள் மற்றும் தொடர் கொலைகளைத் தடுக்க, தமிழகத்திலேயே முதல் முறையாக பஸ்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் பாதுகாப்புக்கு போலீஸார் செல்லும் `பஸ் மார்ஷல்’ திட்டம் கடந்த 21-ம் தேதி தொடங்கப்பட்டது.

திருவைகுண்டம் பகுதியில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களில் கேமரா பொருத்த திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 5 தனியார் பஸ்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும், அனைத்து பஸ்களிலும் காலை, மாலை மாணவ, மாணவியர் செல்லும் நேரங்களில் தலா 2 போலீஸார் பாதுகாப்புக்கு செல்கின்றனர்.

முதல் வழக்கு

இத்திட்டத்தில் முதல் வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவை குண்டத்தில் இருந்து தூத்துக் குடிக்கு நேற்று முன்தினம் காலை வந்த தனியார் பஸ்ஸில் இளை ஞர் ஒருவர் குடிபோதையில் பயணிகளிடம் ரகளை செய்தார். அந்த பஸ்ஸில் பாதுகாவலர்களாக சென்ற போலீஸார், அந்த இளைஞரை பிடித்து திருவைகுண்டம் போலீஸில் ஒப்படைத்தனர்.

திருவைகுண்டம் அருகேயுள்ள ஸ்ரீமூலக்கரை கிராமத்தை சேர்ந்த மீனராஜா (26) என்ற அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தீவிர ரோந்து பணி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீ்ஸ் கூறும்போது, `திருவைகுண்டம் பகுதியில் ஜாதி மோதல்களை மட்டுமின்றி, மக்களுக்கு இடையேறு ஏற்படும் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ரோந்து, 4 சக்கர வாகன ரோந்து, பஸ்களில் கேமரா, பஸ் மார்ஷல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. திருவைகுண்டம் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள், முறப்பநாடு பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களில் போலீஸார் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகின்றனர்.

அதுபோல இரண்டு ஜீப்களில் போலீஸார் 24 மணி நேரமும் சுற்றி வருகின்றனர். குற்ற செயல்களை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மக்களிடம் வரவேற்பு

பஸ்களில் கேமரா மற்றும் பஸ் மார்ஷல் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தால் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்வதாக எண்ணுகின்றனர்.

முதல் கட்டமாக 5 தனியார் பஸ்களில் மட்டுமே கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மற்ற தனியார் பஸ்களிலும் விரைவில் பொருத்தப்படும். அதுபோல அரசு பஸ்களில் தனியார் உதவியுடன் கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கும் போது அனைத்து பஸ்களிலும் முழுமையாக கேமரா பொருத்தப்பட்டு விடும்’ என்றார் எஸ்.பி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in