

ஆந்திர உயர்நீதிமன்றம் அம்மாநில அரசின் விசாரணையை குறை கூறியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தன்னையும் ஒரு பார்ட்டியாக சேர்த்துக் கொண்டு சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை வைக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று ஸ்டாலின் எழுதியுள்ள முகநூல் பதிவில்,''இருபது தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஆந்திர மாநில காவல்துறையினர் நடத்தும் விசாரணையில் திருப்தி இல்லை என்று ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகளே அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
வறுமையின் காரணமாக வயிற்றுப் பிழைப்பிற்கு கூலிகளாகப் போனவர்களை குருவிகளைச் சுடுவது போல் சுட்டுக் கொன்ற ஆந்திர மாநில காவல்துறையின் மீது தேசிய மனித உரிமைகள் ஆணையமும், ஆந்திர உயர்நீதிமன்றமுமே கண்டனம் தெரிவித்து விட்ட பிறகும் கூட நியாயமான விசாரணை நடக்க விடாமல் ஆந்திர மாநில அரசு தடுத்து வருகிறது என்பது புலனாகிறது.
மனித நேயம் சிறிது கூட இல்லாமல் தமிழர்களை சுட்டுக் கொன்ற சிறப்பு அதிரடிப்படையை மாநில அரசே பாதுகாக்க முயற்சி செய்வதை அம்மாநில உயர்நீதிமன்றமே விமர்சனம் செய்து, ''சிறப்பு அரசு வழக்கறிஞரை நாங்களே நியமிக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளாதீர்கள்" என்று ஆந்திர அரசை எச்சரித்துள்ளது. அம்மாநில அரசின் இந்தச் செயல் கடும் கண்டத்திற்குரியது.
இனி, இந்த விவகாரத்தில் ஆந்திர மாநில அரசிடமிருந்து நீதி கிடைக்கும் என்று நம்புவதற்கு துளி கூட இடமில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கனவே கோரிக்கை வைத்தபடி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு இதற்கும் மேல் வேறு எந்த காரணமும் இருக்க முடியாது என்றே கருதுகிறேன்.
ஆகவே 20 தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம், ஆந்திர உயர்நீதிமன்றம் எல்லாம் ஆந்திர மாநில அரசிற்கு கண்டனம் தெரிவித்த பிறகும், தமிழக அரசு இந்த விவகாரத்தில் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
அதிமுக அரசும், பினாமி முதலமைச்சரும் தமிழக மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகவே இதை நான் பார்க்கிறேன்.
ஆந்திர உயர்நீதிமன்றமே அம்மாநில அரசின் விசாரணையை குறை கூறியுள்ள இந்த நிலையிலாவது உடனடியாக தமிழக அரசு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தன்னையும் ஒரு பார்ட்டியாக சேர்த்துக் கொண்டு சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை வைக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.