

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழாவின் ஒருபகுதியான அறுபத்துமூவர் திருவீதி உலாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி 55 சவரன் தங்க நகைகளையும், ரூ 1.5 லட்சம் ரொக்கத்தையும் திருடர்கள் திருடிச்சென்றனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று அறுபத்து மூவர் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்பதற்காக சென்னை மட்டுமன்றி வெளியூர்களை சார்ந்தவர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்ததால் பெரியளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த சூழலை பயன்படுத்திக்கொண்ட திருடர்கள், திருவிழாவுக்கு வந்த 9 பெண்களிடமிருந்து சுமார் 55 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றனர். இதேபோல் மயிலாப்பூர் பஜார் தெருவைச் சேர்ந்த மோகன் என்பவர் ரூ 1.50 லட்சத்தை எடுத்துக்கொண்டு கோயிலுள்ள பகுதியின் வழியே சென்றுள்ளார். அப்போது கூட்ட நெரிசலில் அவர் சிக்கிக்கொள்ளவே, அவரிடமிருந்த ரூ.1.50 லட்சம் பணமும் திருடு போனது.
இந்நிலையில் நகை மற்றும் ரொக்கத்தை பறிகொடுத்தவர்கள் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.